நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்டின் முக்கியமான மாநிலமான மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா ஆகியோர் ஒரு பக்கமும், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் ஆகியோர் மறுபக்கமும் என கட்சிகள் களமிறங்கியுள்ளது.
சிவசேனா தலைவருக்காக வந்த ஹெலிகாப்டர்:
இந்த நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் தலைவர்களில் முக்கியமானவர் ஒருவர் சுஷ்மா அந்தாரே. இவர் சிவசேனா கட்சிக்காக மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், ராய்காட் மக்களவைத் தொகுதிக்காக அவர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொகுதியில் உள்ள மௌகத் பகுதியில் சுஷ்மா அந்தாரேவை அழைத்துச் செல்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தரையில் விழுந்து பெரும் விபத்து:
இதையடுத்து, காலை 9.30 மணியளவில் அந்த பகுதிக்கு ஹெலிகாப்டர் ஒன்று வந்தது. தரையிறங்க முயன்றபோது ஹெலிகாப்டர் மிகுந்த தடுமாற்றத்திற்கு உள்ளாகியது. இதனால், விமானிகள் ஹெலிகாப்டரை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார். ஆனால், அவரால் ஹெலிகாப்டரை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால், தரையிறக்க முயன்ற ஹெலிகாப்டரின் இறக்கைகள் அசுர வேகத்தில் சுற்றியதில் அங்கு பெரும் புழுதிப்புயலே ஏற்பட்டது.
அந்த புழுதிகளுக்கு இடையில் ஹெலிகாப்டர் விமானிகளின் கட்டுப்பாட்டை முழுமையாக இழந்து கீழே விழுந்தது. இதில், ஹெலிகாப்டரின் இறக்கைகள் மிக கடுமையாக சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஹெலிகாப்டரில் சுஷ்மா அந்தாரே இல்லாதது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியது.
இதையடுத்து போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த விமானிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதற்கான காரணம் என்ன? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: Jyothika: ஆன்லைனில் ஓட்டா? அவசரப்பட்டு வாயை விட்ட ஜோதிகா! வரிந்து கட்டும் நெட்டிசன்கள்!
மேலும் படிக்க:Andhra Containers: பிடிபட்ட ரூ.2000 கோடி.. ஆந்திராவை அலறவிட்ட நான்கு கண்டெய்னர்கள்.. நடந்தது என்ன?