கூலி படக்குழுவுக்கு இளையராஜா (Ilaiyaraaja) தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரத்தில், காப்புரிமை விவகாரம் என்பது இசை அமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் உள்ள பிரச்னை என நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) கருத்து தெரிவித்துள்ளார்.


சென்னை திரும்பிய ரஜினிகாந்த்


இன்று மும்பையில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் தான் நடித்து வரும் வேட்டையன் திரைப்படம் மற்றும் விரைவில் தொடங்கவிருக்கும், லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.


அப்போது ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் ஷூட்டிங் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.


அது அவங்க பிரச்னை...


தொடர்ந்து கூலி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது பற்றியது பற்றிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், காப்புரிமை விவகாரம் என்பது இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையேயான பிரச்னை என்று கூறியுள்ளார்.




மேலும் கூலி படத்தின் டீசருக்கு ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் ரஜினிகாந்த் பதிலளித்தார்.


இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்


லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் இணையும் கூலி படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், 1983ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து, இளையராஜா இசையமைத்த ‘தங்க மகன்’ படத்தின் ‘வா வா பக்கம் வா, டிஸ்கோ’ என்ற பாடலின் இசை இந்த டீசரில் பயன்படுத்தப்பட்டிருந்தது. அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில், டீசரில் இசை என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.


தன் பாடல்களுக்கு முழு காப்புரிமை கோரி இளையராஜா தொடர்ந்துள்ள வழக்கு ஒரு புறம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தன்னுடைய அனுமதி இல்லாமல் டீசரில் இசை பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், தன்னிடம் இசைக்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது டீசரில் இருந்து பாடலை நீக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இளையராஜா தரப்பிலிருந்து கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


தனிப்பட்ட முறையில் நட்பு


இளையராஜாவும் ரஜினிகாந்தும் தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டி வரும் நிலையில், ரஜினி நடிப்பில் வரவிருக்கும் கூலி படக்குழுவுக்கு  இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய இவ்விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் தற்போது முதன்முறையாகக் கருத்து தெரிவித்துள்ளார்.  


மேலும் படிக்க: Behind The Song: நக்மாவுடன் கவுண்டமணியை ஆட வைத்த தந்திரம்.. “வெல்வெட்டா” பாடல் உருவான கதை!


Aranmanai 4 Box Office Collection: குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.. அரண்மனை 4 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?