Andhra Pradesh Election Result 2024: தென்னிந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று ஆந்திர பிரதேசம். ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், மக்களவைத் தேர்தலுடன் சேர்ந்து அந்த மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது.
மீண்டும் முதல்வராகும் சந்திரபாபு நாயுடு:
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகளுடன் இணைந்து ஆந்திர சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகளும் இன்று வெளியாகி வருகிறது. ஆந்திராவில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அங்கு படுதோல்வி அடைந்துள்ளது. முன்னாள் முதலமைச்சரான சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் ஆந்திராவில் மீண்டும் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்த சூழலில், ஆந்திர சட்டமன்றத்திற்கு புதிய வருகையாக தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி அசத்தி வருகிறது. ஆந்திராவின் மொத்தம் உள்ள 175 சட்டசபை தொகுதிகளில் தெலுங்கு தேசம் 144 தொகுதிகளிலும், பா.ஜ.க. 10 தொகுதிகளிலும், ஜனசேனா 21 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
சாதித்த பவன் கல்யாண்:
இதில் ஜனசேனா கட்சி தாங்கள் போட்டியிட்ட 21 தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி 21 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பல தொகுதிகளிலும் பின்தங்கியிருப்பதால் தெலுங்கு தேசம் ஆட்சியை அமைப்பது உறுதியாகியுள்ளது. ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பவன் கல்யாண் முன்னணியில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளரை காட்டிலும் 60 ஆயிரம் வாக்குகள் முன்னணியில் உள்ள பவன் கல்யாண் வெற்றி பெறுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
ஒரு வேளை ஜனசேனா கட்சி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றால், ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பவன் கல்யாண் அலங்கரிக்க வாய்ப்பு உள்ளது. தெலுங்கில் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்ட நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என்று கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவியின் உடன்பிறந்த தம்பி ஆவார்.
அண்ணனால் முடியாததை செய்து காட்டிய தம்பி:
நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் கட்சியைத் தொடங்கியபோது ஆந்திராவில் பெரிய பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. ஆனால், அவரால் ஆந்திர தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால், சிரஞ்சீவி கட்சியை கலைத்து காங்கிரசுடன் இணைத்துவிட்டார். அப்போது பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் இளைஞரணித் தலைவராக பதவி வகித்தவர் பவன் கல்யாண்.
பின்னர், நடிகர் பவன் கல்யாண் 2014ம் ஆண்டு ஜனசேனா கட்சியைத் தொடங்கினார். தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் போல தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியால் கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் சாதிக்க முடியாததை, அவரது தம்பி நடிகர் பவன் கல்யாண் செய்திருப்பதால் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
படங்கள் மட்டுமின்றி சொந்த வாழ்க்கையிலும் சினிமா ஹீரோ போல சில விஷயங்களில் நடந்து கொள்வதாலும் நடிகர் பவன் கல்யாண் விமர்சிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Election Results 2024 Winners LIVE: மக்களவைத் தேர்தலில் வரலாறு படைத்த வெற்றியாளர்கள் இவர்கள்தான்!
மேலும் படிக்க: Election Result 2024: ”நிதிஷ் துணை பிரதமர், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து” - ஆஃபர்களை அள்ளி வீசும் I.N.D.I.A. கூட்டணி