Lok Sabha Election Results 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் தற்போது கிங் மேக்கர்களாக உருவெடுத்துள்ளனர். 


தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள், நாடு முழுவதும் 10.5 லட்சம் மையங்களில் நடைபெற்று வருகிறது. 1.45 மணி நிலவரப்படி, பெரும்பான்மைக்கு தேவையான 272-க்கும் அதிகான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி 220-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதேநேரம், தனிப்பெரும்பான்மை என்ற அந்தஸ்தை பாஜக மற்றும் காங்கிரஸ் என எந்த கட்சியும் பெறவில்லை. அதேநேரம், கடந்த தேர்தலில் 303 தொகுதிகளிலும்,  2014ம் ஆண்டு தேர்தலில் 282 தொகுதிகளிலும் வென்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது. 


கிங் மேக்கர்களாகும் மாநில கட்சிகள்:


தனிப்பெரும்பான்மை பெறாததை தொடர்ந்து, பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாட வேண்டி இருக்கிறது. பாஜக தற்போதைய சூழலில் சுமார் 240 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்க, ஆட்சி அமைக்க இன்னும் சுமார் 30 எம்.பிக்களின் ஆதரவை பெற வேண்டியுள்ளது. அந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் முன்னிலை வகிக்கிறது. இதனால், பாஜ மீண்டும் ஆட்சி அமைக்க மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு கட்சிகளின் ஆதரவு மிக முக்கியமாகும். இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியை மாற்றுவது என்பது வரலாற்றில் அடிக்கடி நிகழ்ந்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.


கிங்மேக்கர் சந்திரபாபு நாயுடு:


ஆந்திர மாநிலத்தில் மொத்தம் 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. அதில், தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளிலும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 4 தொகுதிகளிலும்,  பாஜக 3 தொகுதிகளிலும் மற்றும் ஜனசேனா 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கூட்டணி மட்டுமே 18 தொகுதிகளை கைப்பற்றும் சூழல் நிலவுகிறது. சுமார் 30 எம்.பிக்களின் ஆதரவை பாஜக எதிர்நோக்கும் நிலையில், தெலுகு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியின் ஆதரவு பாஜகவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆதரவளிக்கும் பட்சத்தில் பாஜக மிக முக்கியமான் அமைச்சர் பதவிகளை வழங்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


கிங்மேக்கர் நிதிஷ்குமார்:


பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 14 தொகுதிகளிலும், பாஜக 13 தொகுதிகளிலும், லோக் ஜன சக்தி 5 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. சுமார் 30 எம்.பிக்களின் ஆதரவை பாஜக எதிர்நோக்கும் நிலையில்,  நிதிஷ்குமார் மற்றும் லோக் ஜனசக்தி ஆகியோருன் ஆதரவு பாஜகவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆதரவளிக்கும் பட்சத்தில் பாஜக மிக முக்கியமான் அமைச்சர் பதவிகளை நிதிஷ்குமார் தரப்புக்கு வழங்கவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


சிறுகட்சிகளின் ஆதரவு யாருக்கு?


மேற்குறிப்பிட்ட கட்சிகள் தவிர பிஜு ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் சிலர், சில தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். இதனால், கூட்டணி ஆட்சி அமைக்க இவர்களது ஆதரவும் தற்போது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


தொங்கு நாடாளுமன்றம் அமையுமா?


தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினால், தனிப்பெரும் கட்சியாக பாஜக ஆட்சி அமைத்தாலும், அது தொங்கு நாடாளுமன்றமாகவே அமையும். அதேநேரம், தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள்  வெளியே இருந்து ஆதரவளித்தால், எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி ஆட்சி அமைக்கவும் வாய்ப்புள்ளது.