நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியது. காலை முதலே வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. கூட்டணி 350க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகிய நிலையில், கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கும் விதமாக பா.ஜ.க. கூட்டணிக்கு இந்தியா கூட்டணி சவால் அளித்துள்ளது.


ஆட்சியை கைப்பற்றுமா இந்தியா கூட்டணி?


பா.ஜ.க. கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவு மற்றும் பிற கட்சிகளின் ஆதரவு கிட்டினால் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.


இந்த சூழலில், 29 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது, "இவ்வளவு கொடுமைகள் செய்த பிறகும், இவ்வளவு பணம் செலவழித்தும், மோடி  மற்றும் அமித்ஷாவின் ஆணவத்தை இந்தியா வென்றுள்ளது. அயோத்தியில் கூட தோற்றுவிட்டார்கள்.


பிரதமருக்கு பெரும்பான்மை கிடைக்காதது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முறை 400 இடங்களைத் தாண்டும் என்று கூறிய பிரதமர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்”


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பிரதமர் மோடி ஆலோசனை:


பா.ஜ.க.விற்கு சவால் அளிக்கும் விதமாக இந்தியா கூட்டணி வெற்றி பெற்றிருப்பதால், பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைப்பதிலும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் அபார வெற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கலாம் என்று கருதிய பா.ஜ.க.விற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எடுக்கலாம்? என்பது குறித்து பிரதமர் மோடி பா.ஜ.க. உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


மொத்தமுள்ள 42 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸுக்கு 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் காங்கிரஸின் ஆதிர் சவுத்ரியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். மேற்கு வங்கத்தில் பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கருதிய பா.ஜ.க.வினருக்கு ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் சவால் அளித்துள்ளது.


மேலும், பா.ஜ.க.வின் மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்ட ராமர் கோயில் கட்டப்பட்ட அயோத்தி தொகுதியிலே பா.ஜ.க. தோற்றுவிட்டது. அது மட்டுமின்றி, பா.ஜ.க.வின் கோட்டையாக கருதப்பட்ட உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வை விட சமாஜ்வாதி கட்சி அபார வெற்றி பெற்று இந்தியா கூட்டணிக்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Lok Sabha Elections 2024: "வருத்தம்தான்! மக்கள் தீர்ப்பை பாமக தலைவணங்கி ஏற்கிறது" ராமதாஸ் அறிக்கை


மேலும் படிக்க:TN Lok Sabha Election Results LIVE: வெற்றியை கலைஞருக்கு காணிக்கை ஆக்குகிறேன்.. மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி