PM Modi: ராகுல் காந்தியின் எண்ணங்களை நான் உயிருடன் இருக்கு வரை செயல்படுத்த விடமாட்டேன் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்,
பிரதமர் மோடி பரப்புரை:
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் இரண்டு கட்டங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளனர். இதைதொடர்து கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 95 தொகுதிகளில் வரும் மே 7ம் தேதி மூன்றாம்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளஹு. இதை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் கர்நாடகாவின் பெலகாவி, சிர்சி, தாவாங்கேரே மற்றும் ஹோசப்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்ற பாஜக பேரணிகளில் பிரதமர் மோடி அடுத்தடுத்து உரையாற்றினார். அப்போது, “மக்களின் சொத்துக்களை அதிகரிக்கும் விதமாக பாஜக செயல்படுகிறது. ஆனால் காங்கிரஸை சேர்ந்த ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி இருவரும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டை எக்ஸ்ரே செய்வோம் என்று பேசுகின்றனர்.
”நான் உயிரோடு இருக்கும்வரை..”
உங்கள் சொத்துக்கள், வங்கி லாக்கர்கள், நிலங்கள், வாகனங்கள், பெண்களின் ஆபரணங்கள், தங்கம் மற்றும் தாலி ஆகியவற்றை ஆய்வு செய்வார்கள். ஒவ்வொரு வீடாகவும் சோதனை செய்து உங்கள் சொத்துக்களை கைப்பற்றுவார்கள். கைப்பற்றிய பின் மறுபங்கீடு செய்வது குறித்து பரிசீலிப்பார்கள். அதை அவர்களின் அன்புக்குரிய வாக்கு வங்கிக்கு கொடுக்க விரும்புகிறார்கள். இந்த கொள்ளை நடக்க அனுமதிப்பீர்களா? இந்த எண்ணத்தை விடுங்கள், மோடி உயிருடன் இருக்கும் வரை அனுமதிக்க மாட்டேன் என காங்கிரசை எச்சரிக்க விரும்புகிறேன்" என்று மோடி பேசியுள்ளார். மேலும், ”இந்தியாவின் ராஜாக்கள் மற்றும் மகாராஜாக்களை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார். ஆனால், நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாக்கள் திருப்தி அரசியலுக்காக செய்த அட்டூழியங்கள் குறித்து மௌனம் சாதித்து வருவதாகவும்” மோடி சாடியுள்ளார்.
திரித்து பேசும் மோடி - காங்கிரஸ் பதிலடி:
ராகுல் காந்தியின் ஒவ்வொரு அறிக்கையையும் மதவாத தவறான எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும்,தீங்கிழைக்கும் வகையிலும் பிரதமர் மோடி திரிக்கிறார் என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ” மோடியின் பரப்புரைகள் அவரை மேலும் மேலும் அவநம்பிக்கைக்குரியதாக ஆக்குகிறது” என சாடியுள்ளார்.
மேலும், மோடி அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் தனியார்மயமாக்கலை "ஆயுதமாக" பயன்படுத்தி பட்டியல் சாதிகள் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) மற்றும் பிற பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பலவீனப்படுத்தியுள்ளது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.