17வது ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.  இந்த போட்டியில் சென்னை அணி  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது அணி பந்து வீசும் என அறிவித்தார். அதன்படி சென்னை அணியின் இன்னிங்ஸை ராஹானேவுடன் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தொடங்கினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் குவித்தது. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் 98 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து சதம் எட்டும் வாய்ப்பினை தவறவிட்டார். 


அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியியைப் போலவே, பவர்ப்ளே சிறப்பானதாக அமையவில்லை. பவர்ப்ளேவில் மட்டும் ஹைதராபாத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் சேர்த்திருந்தது. சிறப்பாக பந்து வீசிய தேஷ்பாண்டே பவர்ப்ளேவில் மூன்று விக்கெட்டுகளை அள்ளி ஹைதராபாத் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினார். இந்த நெருக்கடி ஹைதராபாத் அணிக்கு ஆட்டம் முழுவதும் தொடர்ந்தது. 


ஆட்டத்தின் 9வது ஓவரில் இளம் வீரர் நிதிஷ் ரெட்டி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதேபோல் சீனியர் வீரரான மார்க்ரம் 11வது ஓவரில் தனது விக்கெட்டினை பத்திரானா பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார். மார்க்ரம் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறியபோது அணியின் ஸ்கோர் 85ஆக இருந்தது. 


அடுத்து கைகோர்த்த க்ளாசன் மற்றும் அப்துல் சமத் சவாலான சென்னை அணியின் பந்து வீச்சினை எதிர்கொள்ள திணறியது. இதனால் சென்னை அணி நிர்ணயித்த ஸ்கோருக்கு அருகில் கூட செல்ல முடியாமல் ஹைதராபாத் அணி தத்தளித்தது. ஆட்டத்தின் 13வது ஓவரில் 100 ரன்களை எட்டிய ஹைதராபாத் அணிக்கு தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. 


ஆட்டத்தின் 16வது ஓவரை வீச வந்த பத்திரானா க்ளாசன் விக்கெட்டினை கைப்பற்ற ஆட்டம் முழுவதும் சென்னை அணியின் வசம் வந்தது. ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் சென்னை அணியின் வெற்றி வித்தியாசம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. இறுதியில் ஹைதராபாத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளார் தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகளை அள்ளினார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.