Skill Bridge Conclave 2024 நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் தரமான பொறியியல் கல்விதான் தென்னிந்திய பெரு நகரங்களின் வளர்ச்சிக்கும், உலகளாவிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேடி வருவதற்கும் அடிப்படை காரணமென அக்னி குழும நிறுவனங்களின் தலைவர் ஆர்.என். ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.
அக்னி தொழில்நுட்பக் கல்லூரி நடத்திய ஸ்கில் பிரிட்ஜ் எனப்படும் திறன் பாலம் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட மனிதவள மேம்பாட்டுத்துறை வல்லுனர்கள் கலந்து கொண்டனர். ஸ்கில் பிரிட்ஜ் நிகழ்ச்சி கற்றல் மற்றும் பணி ஆகியவற்றின் இடையே உள்ள இடைவெளியை நீக்கும் நோக்கத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது.
Skill Bridge Conclave 2024 நிகழ்ச்சி:
இதில் அக்னி குழும நிறுவனங்களின் தலைவர் திரு.ஆர்.என். ஜெயபிரகாஷ், அக்னி தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவர் பவானி ஜெயபிரகாஷ், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர். விஜயகுமார், அக்னி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர். சீனிவாசன் ஆளவந்தார், ஐ ஐ டி மெட்ராசின் முன்னாள் பேராசிரியரும் அக்னி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆலோசகருமான, முனைவர்.டி.எஸ். நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்வி மற்றும் தொழில்துறைக்கு இடையே நெருக்கமான பிணைப்பை வளர்ப்பதை இந்த நிகழ்ச்சி நோக்கமாகக் கொண்டது. அதாவது, SKILL BRIDGE 2024 நிகழ்வின் மையக்கரு கல்வி அறிவை தொழில் நடைமுறைகளுக்கு ஏற்ப உருவாக்குவது ஆகும்.
அக்னி தொழில்நுட்பக் கல்லூரி, சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தால் தன்னாட்சி அந்தஸ்தை பெற்றது. பல்வேறு தொழில்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டத்தை சீரமைக்கும் முயற்சிகளை அக்னி தொழில்நுட்பக் கல்லூரி முன்னெடுத்து வருகிறது.
"தரமான பொறியியல் கல்வியே காரணம்"
நடைமுறைக்கு ஏற்ப தற்போதைய உலக அனுபவங்களுடன், தத்துவார்த்த கற்றலை தடையின்றி ஒருங்கிணைக்க வடிவமைக்கப்பட்ட, பணியுடன் ஒருங்கிணைந்த கற்றலும் (WIL) இதில் அடங்கும். இன்றைய நிகழ்ச்சியில் பல்வேறு அமர்வுகள் மற்றும் குழு விவாதங்கள் மூலம், பாடத்திட்டங்கள், தற்போதைய தொழில்துறையின் போக்குகள் மற்றும் கோரிக்கைகள் இடையேயான இடைவெளி உள்ளிட்டவை மற்றும் தேவைகள் குறித்து ஆராயப்பட்டது.
அக்னி குழும நிறுவனங்களின் தலைவர் திரு.ஆர்.என்.ஜெயபிரகாஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பொறியியல் கல்விதான் அடிப்படை என்றும், பொறியியல் பட்டதாரிகள் இளம் வயதிலேயே நிறைவான ஊதியம் பெற முடியும் என்றும் கூறினார்.
அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆண்டுதோறும் பாடத்திட்டத்தை மாற்ற முடியாது என்பதால், அடிப்படைக் கல்வியை பாடத்திட்டம் மூலமும், துறை சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சியை மாணவர்களுக்கு, அந்தந்த துறை நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்கள் புதிய உச்சத்தை கல்வியில் எட்ட முடியும் என்றும் கூறிய அவர் அதற்கான முயற்சியை அக்னி தொழில்நுட்ப கல்லூரி மேற்கொள்கிறது என்றும் கூறினார்.
ஐ ஐ டி மெட்ராசின் முன்னாள் பேராசிரியரும் அக்னி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆலோசகருமான, முனைவர்.டி.எஸ் நடராஜன் உரையாற்றும்போது, பணியுடன் ஒருங்கிணைந்த கற்றலின் (WIL) முக்கியத்துவத்தையும், கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதில் அதன் தனித்துவத்தையும் குறிப்பிட்டார்.
அக்னி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர். சீனிவாசன் ஆளவந்தார், அக்னி தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னோடி அணுகுமுறையை விவரித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சி.ஜி.ஐ. இந்தியா நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் திருநங்கை ரேகா விஜயராமன், LGBTQI சமூக மக்களும் உள்ளடக்கிய வேலைவாய்ப்பு உருவாகி வருவதை குறிப்பிட்டார். மேலும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்கி மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.