மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் தி.மு.க. தனது கூட்டணி கட்சியினருடன் தொகுதி பங்கீட்டில் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்கள் நீதிமய்யம்:


கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்ய கட்சி, அந்த தேர்தல் தோல்விக்கு பிறகு தி.மு.க.வுடன் நெருக்கம் காட்டி வந்தது. இதனால், மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு கமல்ஹாசன் வந்தார்.


அவரை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் நடப்பு மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதிமய்யம் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டது. ஆனால், மக்கள் நீதிமய்யத்திற்கு மக்களவைத் தொகுதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மாநிலங்களவ உறுப்பினர் பதவி ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.


ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கீடு:


இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், மக்கள் நீதிமய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசனும் இன்று கலந்து பேசியதில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளில் மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்வதெனவும், வரும் 2025ம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதிமய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தி.மு.க.விற்கு ஆதரவாக பரப்புரையில் கமல்ஹாசன்:


மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்த்த அந்த கட்சி தொண்டர்களுக்கும், கமல்ஹாசனின் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் கூறியதாவது, மக்கள் நீதிமய்யம் சார்பில் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்றும், மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்றும் கூறினார்.


மக்கள் நீதிமய்யத்திற்கு மக்களவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் எந்த சின்னத்தில் போட்டியிடுவது? யார் போட்டியிடுவது? குறித்த பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. இதுபோன்ற விவகாரத்தை தவிர்ப்பதற்காகவே கமல்ஹாசன் மாநிலங்களவை தொகுதியை கேட்டுப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், தி.மு.க. ஒதுக்கியுள்ள ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு மக்கள் நீதிமய்யத்தின் சார்பில் கமல்ஹாசனே போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ம.தி.மு.க., வி.சி.க. ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரசுக்கு மட்டும் இதுவரை எத்தனை தொகுதி என்பது உறுதி செய்யப்படவில்லை. இன்று மாலை காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.


மேலும் படிக்க: DMK: மக்களவைத் தேர்தல்! போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் 10ம் தேதி நேர்காணல்


மேலும் படிக்க: Ramanathapuram Lok Sabha constituency: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி - யாருக்கு சாதகம்? நவாஸ் கனி எம்.பி-க்கு மீண்டும் வெற்றி சாத்தியமா?