இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. அந்த அணியின் மிகப்பெரிய பலமாக இருப்பவர் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடி வரும் 41 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் இன்றும் இளவயது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இணையாக பந்து வீசி வருகிறார்.


700 விக்கெட்டுகள்:


இந்தியாவிற்கு எதிரான தொடர் தொடங்கும்போதே ஆண்டர்சன் இந்த தொடரில் 700 விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் டெஸ்டில் ஆடாத ஆண்டர்சன் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். ஆனாலும், அந்த போட்டிகளில் பெரியளவில் சோபிக்கவில்லை.


இந்த நிலையில், தரம்சாலாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் – பும்ரா களமிறங்கினர். குல்தீப் அப்போது, 9வது விக்கெட்டாக குல்தீப் யாதவை ஆண்டர்சன் அவுட்டாக்கினார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆண்டர்சன் தற்போது 3வது இடத்தில் உள்ளார்.


அசத்தும் ஆண்டர்சன்:


41 வயதான ஆண்டர்சன் இதுவரை 187 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தும் 3வது வீரர் ஆவார். முதன் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஷேன் வார்னே. அவருக்கு அடுத்தபடியாக 700 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன். தற்போது 700 வி்க்கெட்டுகளை ஆண்டர்சன் வீழ்த்தியுள்ளார்.


2003ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 21 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் ஆடி வருகிறார். 2002ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஆண்டர்சன் 194 ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 19 டி20 போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 700 விக்கெட் வீழ்த்தியுள்ள ஆண்டர்சனுக்கு ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும், முன்னாள் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தரம்சாலாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் இந்திய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் குல்தீப் யாதவ், சுப்மன்கில் ஆகிய 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 477 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி 259 ரன்கள் இங்கிலாந்தை விட முதல் இன்னிங்சில் முன்னிலையில் உள்ளது. தற்போது இரண்டாவது இன்னிங்சில் ஆடி வரும் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்சில் அசத்திய அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


மேலும் படிக்க: INDvsENG: இந்தியா 477 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆல் அவுட்! இங்கிலாந்தை மீண்டும் மிரட்டுமா இந்திய பவுலிங்?


மேலும் படிக்க: WPL 2024: இறுதி வரை திக்..திக்! ஆட்டத்தை மாற்றிய தீப்தி, கிரேஸ்! 1 ரன் வித்தியாசத்தில் டெல்லி தோல்வி