Ramanathapuram Lok Sabha constituency: ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாறு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே தேசிய கட்சிகள் தொடங்கி, லெட்டர் பேட் கட்சிகள் வரை அனைத்துமே தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், எதில் எந்த கட்சி அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, செலுத்தி வருகிறது என்பதை தொடர்ந்து அலசி வருகிறோம். அந்த வகையில், தமிழ்நாட்டில் தென்கோடியில் உள்ள ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் தேர்தல் வரலாற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உருவான வரலாறு:
தமிழ்நாட்டின் 35வது மக்களவை தொகுதியான ராமநாதபுரத்தில் கடந்த 1951ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதியில் ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகள் அடங்கியுள்ளன. 2008ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், அறந்தாங்கி (புதுக்கோட்டை), திருச்சுழி (விருதுநகர்), பரமக்குடி (தனி) (ராமநாதபுரம்), திருவாடானை (ராமநாதபுரம்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்) மற்றும் முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி எப்படி?
தண்ணீர் இல்லாத காட்டிற்கு மாற்றி விடுவேன் என்ற வசனம் பிரபலமாக முக்கிய காரணமே ராமநாதபுரம் மாவட்டம் தான். ஒரு பக்கம் பரந்து விரிந்த கடல், மறுபக்கம் விவசாயம் எனப் பெரு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இந்து, முஸ்லீம் மற்றும் கிறித்துவம் என மும்மதங்களுக்குமான முக்கிய புண்ணிய ஸ்தலங்கள் தொகுதி முழுவதும் அமைந்துள்ளன. மீன்பிடித்தல், விவசாயம், நெசவுத் தொழில் போன்றவை இந்தத் தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருக்க, புவிசார் குறியீடு பெற்ற 'குண்டு மிளகாய்', பருத்தி போன்றவை பணப் பயிராக உள்ளது. முக்குலத்தோர், தேவேந்திரகுல வேளாளர், இஸ்லாமியர் கணிசமாகவும், யாதவர், நாடார், கிறிஸ்துவர் அதற்கடுத்த எண்ணிக்கையிலும் இருக்கிறார்கள்.
ராமநாதபுரம் தொகுதியின் முக்கிய பிரச்னைகள்:
குடிப்பதற்கான தண்ணீர் தட்டுப்பாடு இன்றும் இத்தொகுதியின் தலையாய பிரச்னையாக உள்ளது. அவ்வப்போது இங்குள்ள மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் சிக்கிக் கொள்வதும், சிலர் சுட்டுக் கொல்லப்படுவதும், நூற்றுக் கணக்கானோர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் பல தசாப்தங்களாக தொடர்கிறது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. பல முக்கிய கண்மாய்கள் தூர்வாரப்படாததால் அங்கு கருவேல மரங்கள் புதர்போல மண்டிப்போய்விட்டன. இதனால் நீர் சேம்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உரிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாததால், இளைஞர்களும், பட்டதாரிகளும், வெளிமாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு வேலை தேடி செல்வது தற்போது வரை நீள்கிறது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் வரலாறு:
மாநிலத்தின் எல்லையில் உள்ள இந்த தொகுதி தேர்தலில், கடந்த காலங்களில் தேசிய கட்சிட்யான காங்கிரசே அதிகம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 1951 தொடங்கி தொடர்ந்து மூன்று முறையும், இதையடுத்து 1984 தொடங்கி நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற்று அசத்தினர். ஆனால், சமீப காலங்களில் நடந்த தேர்தல்களில் மாநில கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களே வெற்றி வாகை சூடி வருகின்றனர்.
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி |
1951 | நாகப்ப செட்டியார் | காங்கிரஸ் |
1957 | சுப்பையா அம்பலம் | காங்கிரஸ் |
1962 | அருணாச்சலம் | காங்கிரஸ் |
1967 | முகம்மது செரிஃப் | சுயேட்சை |
1971 | மூக்கையாத் தேவர் | பார்வார்ட் பிளாக் |
1977 | அன்பழகன் | அதிமுக |
1980 | சந்தியேந்திரன் | திமுக |
1984 | வி. ராஜேஸ்வரன் | காங்கிரஸ் |
1989 | வி. ராஜேஸ்வரன் | காங்கிரஸ் |
1991 | வி. ராஜேஸ்வரன் | காங்கிரஸ் |
1996 | உடையப்பன் | தமிழ் மாநில காங்கிரஸ் |
1998 | சத்தியமூர்த்தி | அதிமுக |
1999 | மலைச்சாமி | அதிமுக |
2004 | பவானி ராஜேந்திரன் | திமுக |
2009 | ஜே.கே. ரித்தீஷ் | திமுக |
2014 | அன்வர் ராஜா | அதிமுக |
2019 | நவாஸ் கனி | இந்திய ஒன்றிய முஸ்லீம் லீக் |
வாக்காளர்கள் விவரம் (2024):
ஆண் வாக்காளர்கள் - 7,97, 012
பெண் வாக்காளர்கள் - 8,08,955
மூன்றாம் பாலினத்தவர் - 79
மொத்த வாக்காளர்கள் - 16,06,046
சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?
அறந்தாங்கி - ராமச்சந்திரன் (காங்கிரஸ்)
திருச்சுழி - தங்கம் தென்னரசு (காங்கிரஸ்)
பரமக்குடி (தனி) - முருகேசன் (திமுக)
திருவாடானை - கருமாணிக்கம் (காங்கிரஸ்)
ராமநாதபுரம் - காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக)
முதுகுளத்தூர் - ராஜ கண்ணப்பன் (திமுக)
நவாஸ்கனி எம்.பி., சாதித்தாரா? சறுக்கினாரா?
திமுக கூட்டணியைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ் கனி, இந்த தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2020-ல் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசி, விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு பெற்றுத் தர உதவியுள்ளார். ராமநாதபுரத்தில் நிற்காமல் சென்று வந்த ராமேஸ்வரம் - பனாரஸ் வாராந்தர ரயிலை, ராமநாதபுரத்திலும் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார். சென்னை - ராமநாதபுரம் விமான சேவை கொண்டுவர வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். அதோடு, “ 3,100 மாணவர்களுக்கு தனது சொந்த நிதியில் உயர்கல்வி படிப்பதற்கு உதவி செய்திருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் 2,000 சோலார் மின்விளக்குகளை அமைத்திருகப்பதாகவும், தன்னுடைய முயற்சியின் விளைவாகத்தான், தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளுக்கான அறிவிப்பில் ராமநாதபுரம் இடம்பெற்றது” என நவாஸ்கனி தெரிவித்துள்ளார்.
ஆனால், தொகுதியின் தலையாய பிரச்னயான குடிநீர் தட்டுப்பாட்டிற்கு எந்தவொரு தீர்வையும் எம்.பி., ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது. என்னை வெற்றிபெற வைத்தால் கடல்நீரைக் குடிநீராக்குவேன், கால்வாயைச் சீரமைப்பேன், நதிநீரை இணைப்பேன், ராட்சச ஆழ்குழாய்க் கிணறு அமைப்பேன்’ என வாக்குறுதிகளை அளித்தவர், எதையும் நிறைவேற்றவில்லை என பொதுமக்கள் கொந்தளிக்கின்றனர். விவேகானந்தர் மற்றும் அப்துல் கலாம் பெயரில் ராமேஸ்வரம் - சென்னை இடையே ரயில் சேவை, பகல் நேர சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளுக்குப் புதிய ரயில் பாதைகள்’ என தான் வாக்குறுதி அளித்ததையே அவர் நிறைவேற்றவில்லை. மீனவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நவாஸ் கனி நிறைவேற்றவில்லை என வாக்காளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.