Lok Sabha Election 2024: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.


பாஜகவில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர்:


காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் பச்சோரி இன்று போபாலில் பாஜகவில் இணைந்தார். அவரோட பல காங்கிரஸ் பிரமுகர்களும் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானும் கலந்து கொண்டார். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைமைக்கு இந்த நடவடிக்கை பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.  காந்தி குடும்பத்துடன் நெருக்கமாக இருந்த பச்சௌரி, மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சராகவும் (பாதுகாப்பு உற்பத்தி மற்றும் விநியோகம்) மற்றும் நான்கு முறை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


சுரேஷ் பச்சோரி சொல்வது என்ன?


பாஜகவில் இணைந்த பிறகு பேசிய சுரேஷ் பச்சோரி, “அரசியலுக்கு வந்த போது, சமுதாயத்திற்கும், நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். அப்போது, சாதிய பேதமற்ற சமுதாயத்தை ஏற்படுத்த வேண்டும் என, காங்கிரஸ் விரும்பியது. ஆனால் அது இன்று ஓரங்கட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ், தான் அறிந்த கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளில் இருந்து தனிமைப்பட்டு உள்ளது. பொதுமக்களிடம் இருந்து விலகி, உறவை ஏற்படுத்த முடியாமல் உள்ளது” என கூறினார்.






பாஜக தலைவர்கள் சொல்வது என்ன?


நிகழ்ச்சியில் பேசிய மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் "துரதிர்ஷ்டவசமாக, தேச சேவையில் பாடுபடும் நல்லவர்களை காங்கிரஸ் தலைமை புறக்கணிக்கிறது. சுயமரியாதை உள்ள ஒருவர் எப்படி இப்படிப்பட்ட சூழலில் பணியாற்ற விரும்புவார்?” என கூறினார். பாஜக மாநில தலைவர் விடி ஷர்மா பேசுகையில், “பிரதமர் மோடியின் தலைமையில் பலர் கட்சியில் இணைவது மத்திய பிரதேசத்தில் உள்ள நம் அனைவருக்கும் பெருமையளிக்கும் விஷயம்” என்றார். மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், சுத்தமான அரசியல் செய்யும், மத்திய பிரதேச அரசியலில் 'துறவி'யாக கருதப்படும் ஒருவர், இன்று பாஜகவில் இணைந்துள்ளார். கட்சி தலைவர்கள் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளார். எந்த நிபந்தனையும் இன்றி நாட்டுக்காக உழைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்” என தெரிவித்தார்.