நாடாளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி வரும் மார்ச் 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விருப்பமனு அளித்த வேட்பாளர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்த உள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல்:
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுவது குறித்த அறிவிப்பு வரும் 15-ம், 16-ம் தேதி வெளியாக உள்ளது. கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. தி.மு.க. கட்சியில் பொதுத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் அளித்துவர்களிடம் கட்சியின் வெற்றி வாய்ப்பு, தொகுதிகள் மாவட்ட வாரியாக கள நிலவரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 10-ம் தேதி (10.03.2024) (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில் நேர்காணல் நடத்த உள்ளார்.
நேர்காணல்:
இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”இந்நேர்காணலின்போது, அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ - பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.”என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தி.மு.க. சார்பில் மொத்தம் 2,984 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி முதல்விரும்புவோரின் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வந்தன. தேர்தலில் போட்டியிட புதிய உறுப்பினர்களாக பெரம்பபூர் தொகுத்திக்கு அமைச்சர் கே.என். நேரு மகன் அருண் நேரு, தென் சென்னை தொகுதிக்கு கழக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம், நெல்லை தொகுதி - பாரத் ஸ்கேன்ஸ் நிறுவனர் டாக்டர் இம்மானுவேல், சபாநாயகர் அப்பாவு மகன் அலெக்ஸ் அரக்கோணம் தொகுதிக்கு அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்தி என விருப்ப மனு வழங்கியுள்ளனர்.
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் டிஆர்.பாலு, நீலகிரி தொகுதியில் ஆ.ராசா, வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி, தென் சென்னை தொகுதியில் தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி தொகுதிக்கு தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் எஸ்.டி. இசை, மத்திய சென்னைக்கு திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் உள்பட பலர் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர்.