அதிமுகவின் கோட்டை என்றழைக்கப்படும் கோவை மாநகராட்சியில் அதிமுக முதல் வெற்றியை பெற்றுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சியில் அதிமுக முதல் வெற்றியை ருசித்துள்ளது. கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறியப்பட்ட ஷர்மிளா சந்திரசேகர் வெற்றி பெற்றார்.
மேலும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியை திமுக கைப்பற்றியது. மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக இதுவரை 23 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. கோவையில் இதுவரை 3 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் திமுக 301 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை 23, காங்கிரஸ் 9, சிபிஎம் 8, பாஜக 4, சிபிஐ 1, மதிமுக 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதனிடையே, கோவை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 32ஆவது வார்டில் திமுகவினர் வாக்கு பெட்டியை மாற்றியதாக கூறி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்