பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் ஆடியுள்ள காந்தாரி பாடல் வெளியாகியுள்ளது. 


கீர்த்தி சுரேஷின் முதல் ஆல்பம் வீடியோவான இந்தப் பாடலுக்கு பவன் சிஹெச் இசையமைத்திருக்கிறார். சுடாலா அசோக் தேஜா எழுதியிருக்கும் இந்தப்பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் பிருந்தா நடன இயக்கம் செய்திருக்கிறார். இந்தப் பாடலை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ், “ உங்களுக்கு பாடல் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.  


 



முழுக்க முழுக்க தெலுங்கு மொழியில் வெளியாகியிருக்கும் இந்தப்பாடலில், கீர்த்தி சுரேஷின் நடனம் கவனம் பெற்றிருக்கிறது.






இந்தப்பாடலை தற்போது வரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். இது மட்டுமல்லாமல், இந்தப்பாடல் தற்போது யூடியூப் ட்ரெண்டில் 9 ஆவது இடத்தையும் பிடித்திருக்கிறது.  


குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த கீர்த்தி  சுரேஷ், தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய, இது என்ன மாயம் படத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகனில் கதாநாயகியாக நடித்த அவர்,  ‘தொடரி’, ‘ரெமோ’, ‘ பைரவா’ ‘ தானா சேர்ந்த கூட்டம்’,  ‘மகாநடி’  ‘சர்கார்’  ‘அண்ணாத்த’  உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் மகாநடி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.


தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் முன்னணி  நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக செல்வராகவன் நடித்துள்ள  ‘சாணி காயிதம்’, தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடித்த  ‘சர்க்காரு வாரிப் பட்டா’ உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. அண்மையில் இவர் நடிப்பில் வந்த  ‘குட் லக் சகி படம்’ கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது சீரஞ்சீவி நடிப்பில் உருவாகிவரும்  ‘போலே சங்கர், மலையாளத்தில் டொவினோ தாமஸின்  ‘வாஷி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.