தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
தமிழகத்தில் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி தொடங்கியது.
ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 2 லட்சத்து 37,985 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு லட்சத்து 85,009 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு பெறுகிறது. எனவே, விருப்பமுள்ளவர்கள் http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக விரைந்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து சேர்க்கை கலந்தாய்வு கல்லூரி அளவில் மே 25 முதல் ஜூன் 20-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கைக்கு தமிழ் வழிப் பட்டப்படிப்புகளுக்கு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசைப் பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
பொதுவாகவே பொறியியல் மோகம் குறைந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் ஆர்வம் மாணவர்கள் மற்றும்பெற்றோர் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக பிகாம்(பொது), பிகாம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், ஆங்கிலம், தமிழ் இலக்கியம், பிஎஸ்சி ஐடி போன்ற முக்கிய பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதாக பேராசிரியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம்,பிஎஸ்சி கணிதம் உள்ளிட்ட கலை பிரிவை முடித்து, அதன் மூலம் டிஎன்பிஎஸ் குரூப்-1 போன்ற அரசு போட்டித் தேர்வுகளை எழுதலாம் என்ற நோக்கில் மாணவர்கள் கலை அறிவியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க