கர்நாடகாவின் முதலமைச்சர் யார் என்ற 5 நாள் இழுபறிக்கு முடிவு கட்டும் விதமாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மித்த கருத்து அடிப்படையில் இருவரும் தேர்வாகி உள்ளனர்.


காங்கிரஸில் தகுதிவாய்ந்த பல தலைவர்கள் உள்ளதால் முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வந்தது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வரை துணை முதலமைச்சராக சிவக்குமார் நீடிப்பார். 


கர்நாடகாவில் மே 20ம் தேதி மதியம் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடக்கிறது. அன்றைய தினம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையின் மற்ற அமைச்சர்களும் பதவியேற்பார்கள்” என தெரிவித்தார்.






காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலை தொடர்ந்து கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், “கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நமது மக்கள் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை, அதற்கு உத்தரவாதம் அளிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.” என குறிப்பிட்டு இருந்தார்.