கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. கர்நாடக மாநில துணை முதல்வராக டி.கே.சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றபோதிலும் யார் முதலமைச்சர் என்று குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா தேர்தல்:
இந்தியளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடகா தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகளானது 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 224 சட்டமன்ற தொகுதிகளில், காங்கிரஸ் 135, பாஜக 66, மஜத 19, மற்றவை 4 தொகுதகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ், முதல்வர் பதவியை பிடிப்பதில், காங்கிரஸ் மாநில தலைவர் சிவக்குமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் இடையே முதலமைச்சர் பதவிக்கு கடும்போட்டி நிலவி வந்தது.
இப்படி இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சித்தராமையா மற்றும் சிவக்குமார் தனித்தனியாக சந்தித்து பேசினர். இதனை அடுத்து, நேற்று ராகுல் காந்தியையும் இருவரும் தனித்தனியாக சந்தித்து முதல்வர் பதவி பற்றி பேசினர்.
கடும் போட்டி
இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அதற்கு மிக முக்கிய காரணம் லிங்காயத் சமூகத்தினர். கர்நாடகாவில் அரசியல் ரீதியாகவும் எண்ணிக்கையின் ரீதியாகவும் செல்வாக்கு மிக்க சாதி பிரிவான லிங்காயத்தினர், பாரம்பரியமாக, பாஜகவுக்கு வாக்களித்து வந்தனர்.
ஆனால், லிங்காயத் சமூகத்தினர், இந்த முறை, காங்கிரஸ் கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்ததாக கூறப்படுகிறது. லிங்காயத் சமூகத்தினரை போலவே, தலித் சமூகத்தினரும் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தலித் சமூகத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி பரமேஸ்வராவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சித்தராமையா தேர்வு
இப்படி கடும் இழுபறிக்கு பிறகு, கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். இது பற்றி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், ”கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மித்த கருத்து அடிப்படையில் இருவரும் தேர்வாகி உள்ளனர்.
தகுதிவாய்ந்த பல தலைவர்கள் உள்ளதால் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. வரும் சனிக்கிழமை பிற்பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா பெங்களூருவில் நடைபெறும். அன்றைய தினம் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையின் மற்ற அமைச்சர்களும் பதவியேற்பார்கள்." என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து, துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது, ”“கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம் மற்றும் நமது மக்கள் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை, அதற்கு உத்தரவாதம் அளிப்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.” என குறிப்பிட்டு இருந்தார்.