உங்கள் எண்ணத்தை மட்டுமல்ல வாழ்க்கையையே கூட இந்தத் தொடர் மாற்றலாம்.


அறிவியல் அயர்ச்சியை ஏற்படுத்தும் என்ற எண்ணம் மாணவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான தேர்வர்களிடம் இருப்பதைக் காண முடிகிறது. அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி, புரிந்து படித்தால், அறிவியலிலும் மதிப்பெண்களை அள்ளலாம்.


குரூப் 4 தேர்வுக்கான பொது அறிவியல் பாடத்திட்டம்


ii. தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்பு, பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல் மற்றும் உணவில் கலப்படம்.


பொது அறிவியல் பாடம் கடினமானது என்று பெரும்பாலானோர் கருதும் நிலையில், அறிவியலையும் அசத்தலாகப் படித்து, மதிப்பெண்களை அள்ளலாம் என்கிறார் ஆட்சியர் கல்வியின் நிறுவனர் செல்வ ராம ரத்தினம். இதுகுறித்து 'ஏபிபி நாடு'விடம் அவர் தெரிவித்ததாவது:


அறிவியலின் இரண்டாவது பகுதி வேதியியலைக் குறிப்பிடுகிறது. இந்தப் பகுதியில் தனிமங்களும் சேர்மங்களும் என்ற தலைப்பு முதலில் உள்ளதாகும். இதில், தனிமம், சேர்மத்துக்கு இடையிலான வேறுபாடு, வகைகள் முக்கியம். புகைத் திரையில் பயன்படும் சேர்மம் எது? என்பது மாதிரியான கேள்விகள் கேட்கப்படலாம். தனிமங்களின் தொகுதி அட்டவணை பற்றிப் படிப்பதும் முக்கியம். 


அதேபோல அமிலங்கள் என்ற பகுதி மிகவும் முக்கியமானது. இதில் இருந்து கட்டாயம் ஒரு கேள்வி உண்டு. அமிலங்களின் தன்மைகள், வகைகள், பயன்பாடுகள் குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வலிமைமிகு அமிலம், வலிமை குறைந்த அமிலம் பற்றிப் படிக்க வேண்டும். இதேபோல காரத்தையும் வகைமைப்படுத்திப் படிக்க வேண்டும். 




பழச்சாறுகளைப் பாதுகாக்க பொட்டாசியம் மெட்ரா பை சல்பேட் என்ற அமிலம் பயன்படுத்தப்படுகிறது. கரப்பான் பூச்சியை விரட்ட ஃபோரிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது. உணவு கெடாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் வினிகரைத் தயாரிக்க, எத்தனாயிக் அமிலம் பயன்படுகிறது. இதுபோன்று அன்றாட வாழ்வில் அமிலங்களின் பயன்பாடுகளில் இருந்து நிச்சயம் கேள்வி கேட்கப்படும். அமிலக் கரைசலின் பண்புகள் குறித்தும் படிக்க வேண்டும். வலிமைமிகு அமிலம், வலிமைகுறைந்த அமிலங்கள், லூயிஸ் அமிலம் உள்ளிட்டவை குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். 


காரங்கள்


நீரில் கரைந்து ஹைட்ராக்ஸைடு அயனிகளைத் தரும் சேர்மங்களே காரங்கள் ஆகும். லூயிஸ் அமிலம் பகுதியைப் போல லூயிஸ் காரம் குறித்துப் படிக்க வேண்டியது அவசியம். காரங்களின் வகைகள், பயன்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். காரங்களில் இருந்து குறைந்த அளவே கேள்விகள் கேட்கப்படும் என்றாலும் அமிலங்களையும் காரங்களையும் ஒப்பிட்டுக் கேள்விகள் கேட்கப்படலாம். 


உப்புகள்


உப்புகள் பகுதியில் இருந்து சமன்பாடுகள் சார்ந்து கேள்விகள் கேட்கப்படலாம். காப்பர் சல்பேட்டில் இருந்து கேள்விகள் கேட்கப்படலாம். மலமிளக்கியாகச் செயல்படக் கூடிய எப்சம் உப்பு எது?, கட்டிடங்களை வெள்ளை அடிக்கப் பயன்படும் கால்சியத்தின் சேர்மம் எது? (கால்சியம் ஹைட்ராக்ஸைடு), பொது மேசை உப்பு சேர்மமா, தனிமமா, கலவையா அல்லது உலோகக் கலவையா? என்பது மாதிரியான கேள்விகள் கேட்கப்படலாம். 


ஹலைடு தாது எது? (பாறை உப்பு), அமிலத்தன்மை உள்ள உப்பு எது?, பருத்தித் துணிகளை வெண்மையாக்கும் உப்பு, முறிந்த எலும்புகளை ஒட்டப் பயன்படுவது எது? ரொட்டி சோடா தயாரிக்கப் பயன்படுத்தும் உப்பு எது என்பது மாதிரியான அன்றாடப் பயன்பாடுகள் சார்ந்து படிக்க வேண்டும். உப்பின் சமன்பாடுகள், பயன்பாடுகள் சார்ந்து கேள்விகள் இருக்கலாம். pH மதிப்பு சார்ந்தும் வினாக்கள் எழுப்பப்படலாம். உதாரணத்துக்கு, 0.0001 ml HCL-ல் எவ்வளவு  pH மதிப்பு உள்ளது? என்ற கேள்வி அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று. 





பெட்ரோலியப் பொருட்கள்


எண்ணெய் வளங்கள் எங்கெல்லாம் கிடைக்கும் என்று படிக்க வேண்டும். இதை புவியியல் பகுதியில் பார்த்திருப்போம். பாலிமர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பெட்ரோலியப்  பொருட்கள் பற்றியும் பிசின், ரப்பர், செல்லுலோஸ் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். எது இயற்கையான பாலிமர், எது செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பாலிமர் என்ற ரீதியில் கேள்விகள் கேட்கப்படலாம். 


பாலிமர் பகுதியை வேதியியல் பாடத்திலும் பெட்ரோலியப் பொருட்கள் பகுதியிலும் படிக்கலாம். அதேபோல மீத்தேன், ஈத்தேன், எத்தனால் தயாரிப்பு குறித்தும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பயோ பிளாஸ்டிக், பயோ டீசல் ஆகியவை குறித்தும் அறிந்திருப்பது முக்கியம். National Research Centre on Plant Biotechnology என்ற அமைப்பு பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். 


உரங்கள்


பொருளாதாரம் > வேளாண்மை தலைப்பின்கீழும் உரங்கள் குறித்துக் கொடுக்கப்பட்டிருக்கும். உரங்கள் மண்ணில் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்று படிக்க வேண்டும். உரங்களின் வகைகள், நைட்ரஜன் உரங்கள் என்றால் என்ன? எதெல்லாம் நைட்ரஜன் உரம் உரமல்ல என்பன உள்ளிட்டவை முக்கியம். அம்மோனியா, பாஸ்பேட், NPK, ஜிப்சம், சூப்பர் பாஸ்பேட், மட்கும் உரத்தை அளிக்கும் மண்புழு ஆகியவை தவற
விடக்கூடாதவை. குறிப்பாக NPK தலைப்பில் இருந்து 100 சதவீதம் கேள்விகள் கேட்கப்படும். 


விவசாயிகளுக்கென மண் வள அட்டை உருவாக்கப்பட்டு, நம்முடைய நிலத்தில் என்ன பயிர் நன்கு விளையும் என்ற அறிவுரையை மத்திய அரசே அளிக்கும். இதுகுறித்தும் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உரத் தொழிற்சாலைகள் எங்கெல்லாம் உள்ளன?, இயற்கை விவசாயத்தை முதன்முதலில் அறிமுகம் செய்த மாநிலம் என்பது மாதிரியான கேள்விகளை நடப்பு நிகழ்வுடன் தொடர்புபடுத்திப் படிக்க வேண்டும். 



பூச்சிக்கொல்லிகள்


பூச்சிக் கொல்லிகள், களைக் கொல்லிகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள், இரண்டுக்கும் என்ன வேறுபாடு? என்பவை முக்கியம். 2ஜி, 3ஹி தொலைதொடர்பு சேவையைப் போல, முதல் தலைமுறை, 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது தலைமுறை பூச்சிக்கொல்லிகள் குறித்துப் படிப்பது அவசியம். 


காப்பர் சல்பேட் உப்பு பூச்சிக்கொல்லியாகப் பயன்படும். அதேபோல காமர்கேஷன், ரோடினோன் வகை பூச்சிக்கொல்லிகள் குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். வேளாண்மையில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி வகைகள், கொசுக்கள் மீது தெளிக்கப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி குறித்துப் படிக்க வேண்டியது அவசியம். 


நோய்கள் எப்படிப் பரவுகின்றன? அரசு அவற்றை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதையும் பூச்சிக்கொல்லிகளுடன் இணைத்துப் படிக்க வேண்டும். 


உலோகவியல்


புவியியல் பகுதியில் படிக்கும் இயற்கை வளங்களின் ஒரு பகுதியே உலோகவியல். வெள்ளி, அலுமினியம், தங்கம், வைரம், வெண்கலம் உள்ளிட்ட உலோகங்கள், இரும்புத் தாதுக்கள் சார்ந்து படிப்பதே உலோகவியல் ஆகும். அலோகம், உலோகத்துக்குக் கீழ் இதைப் படிக்க வேண்டும். 


எந்த வைரம் கிறிஸ்டலைன் வடிவத்தில் இருக்கும்? கார்பன் அமைப்பு எப்படி இருக்கும்? உலோகங்களின் அதிகபட்ச உருகுநிலை, உயரிய உலோகம் எது?, மிகக் குறைந்த வினைபடு திறன் கொண்ட உலோகம் எது? மத்திய அரசின் பாதுகாப்புப் படைகளில் பயன்படுத்தப்படும் உலோகங்கள் (டைட்டேனியம், மாங்கனீசு உள்ளிட்டவை) உள்ளிட்டவை ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளில் சில. 


உலோகங்களின் செயல்திறன், அவற்றின் உருகுநிலை திறன் ஆகியவற்றை ஏறுவரிசை, இறங்கு வரிசை அடிப்படையில் படித்துக்கொள்ள வேண்டும். கண்ணாடித் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் கட்லெட், வெடிமருந்து தயாரிக்கப் பயன்படுத்தும் உலோகம், கிராஃபைட், உலோகங்களின் இயைபு, கிரியோலைட், மைக்கா, வெள்ளீயம் ஆகியவையும் முக்கியம். மிகக் குறைந்த மின்கடத்தியாக உள்ள கார்பனின் வடிவம், கார்பன் தாதுக்கள், உலோகக் கலவைகள் சார்ந்தும் படிக்க வேண்டும். 


யுரேனியம், தோரியம், அவற்றில் உள்ள தனிமங்கள், கனிமங்கள், தாதுக்கள் குறித்தும் படிக்க வேண்டியது முக்கியம். இயற்கையில் கிடைக்கும் கனமான உலோகம் எது? (யுரேனியம்), நேர் தாம்சன் விளைவு உடைய உலோகம் எது? போன்ற வகையில் கேள்விகள் கேட்கப்படலாம். 




உணவில் கலப்படம்


நடப்பு நிகழ்வு சார்ந்து இதைப் படிக்க வேண்டும். விட்டமின்கள் ஏ, சி, டி, கே பற்றியும் உணவு முறைகள் பற்றியும் படிக்க வேண்டும். அறிவியலின் 3ஆவது பிரிவில் வரும் ஊட்டச்சத்து, உடல் நலம் சார்ந்த தலைப்பிலும் இதைப் படிக்கலாம். 


உணவுப் பாதுகாப்புச் சட்டம், இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India), உலக வர்த்தக மையம் (WTO) குறித்துப் படிக்க வேண்டும். 


நடப்பு நிகழ்வு சார்ந்து சீனாவின் மேகி நூடுல்ஸ், உலகளாவிய அளவில் தடை செய்யப்பட்ட உணவுகள், ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மாம்பழம் உள்ளிட்ட இந்திய உணவுகள் உள்ளிட்டவற்றைப் படிக்க வேண்டும். உணவில் மேற்கொள்ளப்படும் கலப்படங்கள் குறித்து கவனம்கொள்ள வேண்டும். 


நடப்பு நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள்


ஆவர்த்தன அட்டவணையில் புதிதாகத் தனிமங்கள் எதையாவது சேர்த்திருப்பார்கள். அதைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அமிலங்கள் பகுதியில், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறப்புப் பிரிவு இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டிருப்பதை வைத்துக் கேள்விகள் கேட்கலாம். உப்புகள் பகுதியில், குழந்தைகளுக்கு ஏற்படும் உப்புச்சத்துக் குறைபாட்டை நீக்க, அரசு அறிமுகம் செய்த திட்டங்கள் பற்றிக் கேட்கலாம். மாங்கனீசு நோட்யூல்ஸ் எனும் உலோகம் இந்தியப் பெருங்கடலில் கிடைக்கிறது. இதைப் பற்றிக் கேட்கவும் வாஉப்புண்டு. 


சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இயற்கை வளங்கள் குறித்து புவியியல் பக்கத்தில் படிப்பதை, ரசாயனங்கள் அடிப்படையில் வேதியியலில் படிக்க வேண்டும்’’. 


இவ்வாறு ஆட்சியர் கல்வி நிறுவனர் செல்வ ராம ரத்தினம் தெரிவித்தார்.


வேதியியல் சரி, பிற அறிவியல் பாடங்களை எளிதாக, இனிமையாகப் படிப்பது எப்படி?


பார்க்கலாம்...


-க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramanip@abpnetwork.com


முந்தைய அத்தியாயங்களையும் வாசிக்கலாம்..


TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 16: புவியியலில் முழு மதிப்பெண்கள்: எளிதாகப் பெறுவது எப்படி?


TNPSC Exam Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 15: உயிரினங்கள் முதல் காலநிலை வரை... சுவாரசிய புவியியல்... தயாராவது எப்படி?


TNPSC Preparation: உள்ளங்கையில் அரசுப்பணி 14 - விடுதலையில் தமிழ்நாட்டின் பங்கு... முழு மதிப்பெண் பெறுவது எப்படி?