திட்டமிட்டப்படி செப்டம்பர் 1ம் தேதி (நாளை மறுநாள்) முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 18ஆம் தேதி பள்ளி திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதில், அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கப்பட்டு, சுகாதார வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும். கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும். மாணவர்கள் கை கழுவும் வசதி, உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யும் கருவி ஆகியவை பள்ளியில் இடம்பெற வேண்டும். முதல் நாளில் 50 சதவீத மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50 சதவீத மாணவர்களும் மாறி மாறி பள்ளிக்கு வர வேண்டும்.
கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள், ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க கூடாது. பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். இதமான சூழல் இருந்தால் மாணவர்களை பள்ளி வளாகத்தில் அமர வைத்து பாடம் நடத்தலாம்;பள்ளி வளாகத்தில் எச்சில் துப்புவதை தடுக்க வேண்டும். பள்ளிவரும் மாணவர்களுக்கு வைட்டமின் சி மாத்திரை, நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் உடல்நிலையை வாரம் ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ , மாணவிகள் வரும் செப்டம்பர் 1 முதல் அடையாள அட்டை , சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதே போன்று, அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (Government ITI, Government College, Government Polytechnics) பயிலும் மாணவ / மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பில் அவசரம் காட்ட வேண்டாம்- அரசுக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி வேண்டுகோள்
செப்டம்பர் 1 முதல் மாணவர்கள் பஸ் பாஸ் இல்லாமல் பயணிக்கலாம்.. தமிழக அரசு