தருமபுரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், பென்னாகரம் சட்டபேரவை உறுப்பினருமான ஜி.கே.மணி செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மேகேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதில் பிடிவாதமாக உள்ளது. தமிழக அரசு தலைமையில்  அனைத்து கட்சிகளும் எதிர்த்து ஒரே நிலைப்பாட்டில் ஒற்றுமையாக  உள்ளனர். தமிழக நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி குழு, மத்திய அமைச்சரை சந்தித்த போது, மத்திய அமைச்சா் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்று தெரிவித்தார்.  கர்நாடக முதலமைச்சர் எங்களுக்கு தமிழ்நாடு அனுமதி தேவையில்லை. நாங்கள் அணை கட்டியே தீருவோம் என்று சொல்கிறார். தமிழக அரசு உறுதியாக இருந்து அனைத்து கட்சியின் ஆதரவோடு மேகேதாட்டு பகுதியில் அணை கட்டக்கூடாது என்று முனைப்பாக செயல்பட வேண்டும். 

 


 

மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் கவனத்தை ஈர்க்க அமைதி வழியில் அறவழியில் போராட்டம் செய்ய வேண்டும். இதற்காக அமைதி வழியில் போராட்டம் நடத்த வேண்டும். கர்நாடகா அணை கட்ட  பெங்களூர் குடிநீர் மற்றும் நீர்மின் திட்டம் என்ற இரண்டை மட்டுமே தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமையை காப்பதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரே குரலில் இன்று இருக்கிறது. இது தொடர்ந்து நீடிக்க வேண்டும்.

 


 

செப்டம்பர் முதல் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. கொரோனா பரவல் காலமென்பதால் மாணவர்கள் எண்ணிக்கையை அளவீடு செய்து வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை செப்டம்பர் 15 ஆம் தேதி திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு  பொறுத்திருந்து பார்த்து பள்ளிகளை திறக்க வேண்டும், இதில் அவசரப்படக் கூடாது. ஒன்றாம் தேதி பள்ளி திறப்பை முன்மாதிரியாகக் கொண்டு முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

 


 

மேலும் 100 நாட்களில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று கேள்விக்கு பதிலளித்த அவர், சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.  தமிழக அரசின் செயல்பாடு தற்போது வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பாமக சட்டப்பேரவையில் அங்கம் வகிக்கிறது. இந்த முறை அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் பேரவையில் கேள்வி எழுப்ப நேரம் ஒதுக்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத்தில் ஒரு ஆரோக்கியமான சூழல் இருந்து வருகிறது என தெரிவித்தார். மேலும் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடித்து வருவதாகவும் தற்போது வரை அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இருப்பதாகவும் பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார். செய்தியாளா் சந்திப்பின் போது தருமபுரி சட்டபேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன். முன்னாள் எம்.எல்,ஏக்கள் பாரிமோகன், வேலுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.