தடகள போட்டிகளில் ஆடவருக்கான  எஃப்-64 பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியாவைச் சேர்ந்த சந்தீப் சௌதரி மற்றும் சுமித் அண்டில் ஆகிய இருவரும் பங்கேற்றனர். இதில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சுமித் அண்டில் இந்தப் போட்டியில் உலக சாதனையுடன் சுமித் அண்டில் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் சந்தீப் நான்காவது இடத்தை பிடித்தார். 


இந்நிலையில் இந்த சுமித் எப்படி ஈட்டி எறிதலுக்கு வந்தார்? 


ஹரியானா மாநிலம் சோனிபத் பகுதியைச் சேர்ந்தவர் சுமித். ஹரியானா மாநிலத்தில் உள்ள மற்ற இளைஞர்களை போல் இவரும் தன்னுடைய இளம் பருவம் முதல் மல்யுத்தத்தில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார். எனினும் 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் இவருடைய காலில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இவருடைய மல்யுத்த வாய்ப்பு பறிபோனது. 


தன்னுடைய இடது காலை இழந்து இருந்தாலும் அவருக்குள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற வெறி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்துள்ளது. அவருக்கு இருந்த வெறிக்கு நல்ல ஊக்கம் அளிக்கும் வகையில் 2017ஆம் ஆண்டு பாரா போட்டிகள் தொடர்பான செய்தி அமைந்தது. அப்போது முதல் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று தீவிரமாக பயிற்சியை தொடங்கினார். அதில் குறிப்பாக ஈட்டி எறிதல் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளார். 






2019ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபேற்ற உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற பாரா தடகள போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதே ஆண்டில் துபாயில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 62.88 மீட்டர் தூரம் வீசி உலக சாதனை படைத்தார். அத்துடன் எஃப்-64 பிரிவு ஈட்டி எறிதல் பிரிவில் உலக தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தார். 




இதனால் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இவர் தங்கம் வெல்லுவார் என்று அதிக நம்பிக்கை இருந்தது. தற்போது அந்த நம்பிக்கையை அவர் உண்மையாக்கியுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்துடன் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். இதன்மூலம் டோக்கியோ பாராலிம்பிக் தடகள போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கத்தை பெற்று தந்துள்ளார். மேலும் டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு இரண்டாவது தங்கப்பதக்கத்தையும் பெற்று தந்து அசத்தியுள்ளார். அவருக்குள் இருந்த விளையாட்டு வெறியே அவரை பாராலிம்பிக் பதக்கம் வரை கொண்டு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: 11 வயதில் விபத்து... 19 வயதில் தங்கம்... முதுகு தண்டு பாதிப்பில் மீண்ட ‛பீனிக்ஸ்’ அவானி லெகாரா!