தமிழ்நாட்டில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும் வெயில் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதியை அமைச்சர் முதல்வருடன் ஆலோசித்து அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 12 -ம் தேதி திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மழலையர் பள்ளி முதல் ஐந்தாம் வகுப்பு வரை 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று திறக்கப்பட்டன.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட ஸ்ரீ குருஞானசம்பந்தர் துவக்கப்பள்ளியில் இன்று வகுப்புகள் துவங்கின. முதல் நாளான இன்று மாணவ மாணவிகளை தேவதைகள் போன்று வேடமிட்ட பள்ளி குழந்தைகள் மேல தாளங்கள் முழங்க பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இந்த ஆண்டு முதன்முதலாக பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் தேம்பித் தேம்பி கண்ணீர் விட்டபடி தங்கள் அம்மாவை தேடினர். அம்மா கிட்ட போகணும், அம்மா வாம்மா என்று தங்கள் பிஞ்சு கைகளால் வாசலை நோக்கி அழைத்தபடியே குழந்தைகள் அழுது கொண்டே இருந்தன. அவர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மிகுந்த சிரமப்பட்டு ஆறுதல் படுத்தி வகுப்பறைகளுக்கு அழைத்துச் சென்றனர்.
NEET UG Results 2023: வெளியானது நீட் தேர்வு முடிவுகள்; தெரிந்து கொள்வது எப்படி? முழு விவரம்!
ஒரு சில குழந்தைகள் அவர்கள் பிடியில் இருந்து தப்பி பள்ளிவாயிலை நோக்கி ஓடினர். அவர்களை ஆசிரியர்கள் பின்னாலே ஓடிச் சென்று பிடித்து இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு வகுப்பறைகளுக்கு அழைத்து சென்றனர். குழந்தைகள் அம்மாவைப் பிரிந்து அழுதபடி நின்றது ஒருபுறம் என்றால் மறுபுறம் குழந்தைகளை பிரிந்த அம்மாக்கள் பள்ளி வீட்டிற்கு முன்புறம் குழந்தையின் கண்ணுக்கு தெரியாதபடி மறைந்து நின்று எட்டி எட்டி பார்த்து கண்களை கசக்கி கொண்டு நின்றனர். பிறந்தது முதல் அம்மாவை பிரியாத குழந்தைகள், புது சீருடை காலணிகள் அணிந்து அழகாக பள்ளிக்குச் சென்றாலும் தங்கள் அம்மாவை தேடியபடி அழுத காட்சிகள் உணர்ச்சிமயமான ஒன்றாக இருந்தது.
DMK Press Meet: அமலாக்கத்துறை மத்திய அரசின் கைப்பாவை, இது ஜனநாயகப் படுகொலை - தி.மு.க.
தொடக்கப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்டத்திலேயே அதிகளவில் 157 மாணவர்களை சேர்த்து தருமபுரம் ஆதீனப்பள்ளி சாதனை படைத்ததற்கு இப்பள்ளிக்கு வந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பார்த்தசாரதி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கடேசனை பாராட்டியதுடன் அரசின் நலத்திட்ட உதவிகளான பள்ளி சீருடை, புத்தகங்கள், எழுது பொருள்கள் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு வழங்கி பாராட்டி வரவேற்பு தெரிவித்தனர்.