நடிகர் விஜய் சேதுபதி தனது மகன் சூர்யா சேதுபதியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அடுத்த விஜய் சேதுபதி என அவரை வாழ்த்தி வருகிறார்கள்.


நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகனான சூர்யா சேதுபதி ஆகிய இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று நேற்று சமூக வலைதளத்தில் வெளியானது.இந்தப் புகைப்படத்தில் அவரது மகன் அமர்ந்திருக்கும் நிலையில், விஜய் சேதுபதி நின்றிருந்தபடி கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்கள் இருவரும் . இந்தப் புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள், அடுத்த விஜய் சேதுபதியாக அவரை பாராட்டத் தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல் விரைவில் சூர்யா சேதுபதி கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அப்படி நடித்தால் அவருக்கு ஏற்ற கதா நாயகி யாராக இருக்கும் என்று கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


சூர்யா சேதுபதி


 நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி  நானும் ரவுடிதான் படத்தின் மூலமாக முதல் முதலில் திரையில் தோன்றினார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா. இதனைத் தொடர்ந்து சேதுபதி படத்தை இயக்கிய அருண் இயக்கிய சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார் சூர்யா சேதுபதி. ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இந்தத் திரைப்படம் சுமாரான வெற்றி பெற்றது.


விடுதலை


தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறாராம் சூர்யா சேதுபதி. முந்தைய பாகத்தில் விஜய் சேதுபதியின் காட்சிகள் மிகக்குறைவாகவே இடம்பெற்றிருந்த நிலையில் இரண்டாம் பாகம்  முழுக்க முழுக்க விஜய் சேதுபதியை மையமாக வைத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் இளமைக்கால கதாபாத்திரத்தில் சூர்யா சேதுபதி நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


விஜய் சேதுபதி


நடிகர் விஜய் சேதுபதி தற்போது ஹிந்தி , தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அண்மையில் இந்தியில் வெளியான ஃபார்ஸி  வெப் சீரிஸ் மூலம் பாலிவுட் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார் விஜய் சேதுபதி. ஷாஹித் கபூர், ராஷி கன்னா ஆகியவர்கள் இணைந்து நடித்திருந்தனர்.  தற்போது மேலும் ஒரு வெப் சீரிஸில் நடிக்க உள்ளாராம் விஜய் சேதுபதி. மேலும் ஷாருக் கான் நடித்து அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழில் இயக்குநர் மிஸ்கின் இயக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் விஜய் சேதுபதி. இதனையடுத்து மற்றொரு முன்னணி இயக்குநர் ஒருவரின் படத்திலும் நடிக்க இருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.