மதுரை தத்தனரி பகுதியில் அப்பளம், வத்தல் வியாபாரம் செய்து வருபவர் ராஜேந்திரன். 86 வயதான இவர், கடந்த 2018 -ல் மாநகராட்சி திரு.வி.க. பள்ளியில் 10 புதிய வகுப்பறைகள், இறைவணக்க கூடம் உள்ளிட்டவற்றைத் தனது சொந்த செலவில் கட்டிக் கொடுத்துள்ளார். ரூ.1.10 கோடி ரூபாய் நிதியை இதற்காக செலவழித்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,”மதுரை தத்தநேரியை சேர்ந்த ராஜேந்திரன் அவர்கள் திருப்பதி விலாஸ் என்ற பெயரில் மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். சமூகப் நலப் பணிகளில் ஆர்வம் கொண்ட அவர், மதுரை மாநகராட்சி, திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார். மேலும், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி, கைலாசபுரம் ஆரம்பப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஒரு ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்து தந்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் அருகில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு 2 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். சமூக அக்கறையோடு தொண்டாற்றி வரும் ராஜேந்திரனை தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டி, அவரது சமூகப் நலப் பணிகள் தொடர்ந்திட வாழ்த்தினார்.
இதுதொடர்பாக ராஜேந்திரன் கூறும்போது, ’’கடவுள் கொடுப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து உதவ வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’’ எனத் தெரிவித்தார்.