Independence Day 2023 Wishes in Tamil: நாட்டின் 77வது சுதந்திர தினத்தை இன்று நாட்டு மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்த சுதந்திர நாளில் வீரம் செரிந்த வரலாற்று குறிப்புகளை பற்றி பார்க்கலாம். 


சுதந்திரத்திற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களின் பங்கு அளப்பறியது. அதுகுறித்து வரலாற்று ஆய்வுகள் மேற்கொண்டுவரும் சிவகங்கை தொல்நடை குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா பேசுகையில், “இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் படிப்படியாக அரசியல் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஆங்கிலேயர்கள் அரசுரிமையை தனதாக்கிக் கொண்டனர். தனக்கு உதவியாக உள்ளவர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கினர், ஆகவே நமது ஆட்சியாளர்களும் அவர்களோடு நட்புறவு பாராட்டுவதை பெரிதும் விரும்பினர், அதில் முரண்பட்டோர் மிகச் சிலரே.. ஆற்காடு நவாப் அன்வாருதீன் மறைவிற்குப் பிறகு தென்பகுதியில் மிகுந்த குழப்பம் நிலவியது. அவனது மருமகனான சந்தா சாகிபும் மகனான முகமது அலியும் அரசுரிமையை கைப்பற்ற போட்டி போட்டுக் கொண்டனர். இந்நிலையில் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரும், இராமநாதபுரம் சேதுபதி மன்னரும் நடுநிலைமை வகித்தனர். மதுரையில் முகமதியர்களை ஆதரிக்காமல் இந்து ராஜ்யத்தை தோற்றுவிப்பதில் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் மதுரையை ஆட்சி செய்ய விஜயகுமார் திருமலைக்கு பட்டம் சூட்டியும் அது பயனற்றுப் போனது.




நவாப் முகமது அலி மகன் உம்தத் உல்  உமாரா சிவகங்கை அரசர் முத்து வடுகநாதரிடம் ஒரு லட்சம் பணம் கப்பமாக செலுத்துமாறு கேட்டார். அதற்கு சிவகங்கை அரசர் மறுத்து விடவே 1772 -மே மாதம் திருச்சியில் இருந்து தளபதி ஜோசப் ஸ்மித், நவாபின் மகன் உமாரா ஆகியோர் கூட்டு தலைமையில் ஒரு படை புறப்பட்டது. ஆங்கிலேயரது மற்றொரு அணி தளபதி..பான்சூர் தலைமையிலும் வந்தது. சிவகங்கை அரசுக்கும் நவாப் ஆங்கிலேய கூட்டுப் படைக்கும் ஜூன் மாதத்தில் தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது, அதில் ஜூன் 21ஆம் நாள் தளபதி ஸ்மித்  பாஞ்சூர் ஆகியோர் சிவகங்கையை கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து காளையார் கோவிலில் நடந்த போரில் பலத்த பாதுகாப்போடு இருந்த சிவகங்கை அரசர் முத்து வடுகநாதர் கம்பெனி வீசிய பீரங்கி குண்டுகளுக்கு தானும் அவரது இரண்டாவது மனைவி கௌரி நாச்சியாரும் 25.06.1972ல் கொல்லப்பட்டு தாய்நாடு காக்க வீர மரணம் எய்தினர். இவ்வாறாக ஆங்கிலேயருக்கு எதிராக முதல் புரட்சியும் கிளர்ச்சியும் செய்தவர் சிவகங்கை இரண்டாவது அரசர் முத்துவடுகநாதர் ஆவார்.




முத்துவடுகநாதர் இறந்தபின் வேலு நாச்சியார் உயிரை போக்கிக் கொள்ளாமல் ஆற்காடு நவாப்பிடமிருந்து சிவகங்கையும், ராமநாதபுரத்தையும் மீட்டெடுக்க பிரதானி தாண்டவராயன் பிள்ளை, மருது சகோதரர்கள் துணையுடன் உறுதி பூண்டார். சிவகங்கை ராமநாதபுரம் பகுதியை மீட்டெடுக்க  8.12.1972ல் வேலுநாச்சியார் ஹைதர் அலிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் 5000 குதிரைவீர்களையும் 5000 போர் வீரர்களையும் அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டார். சிவகங்கையில் இருந்து தப்பி சென்று அவர் எட்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையை விருப்பாச்சி பகுதியில் வாழ்ந்தார். விருப்பாட்சியில் இருந்து சிவகங்கைச் சீமை தலைவர்களுக்கு அவர் அனுப்பிய ஓலைகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. ஹைதர் அலி நவாப் பின் ஆக்கிரமிப்பில் இருந்து மீள  உதவிப் படை அனுப்பியதும் மூன்று பிரிவுகளாக பிரிந்து மும்முனை தாக்குதலை மேற்கொண்டு தொடர் முயற்சிக்குப் பிறகு வெற்றி பெற்றார். எட்டு ஆண்டுகள் உசைன் நகர் என்ற பெயரில் வழங்கப்பட்ட சிவகங்கையை மீட்டெடுத்து மீண்டும் சிவகங்கைச் சீமைக்கு புத்துணர்வு அளித்தார். அவருக்குப் பின் அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் அரசியானார். ஆனால் அவர் வேலு நாச்சியாருக்கு முன்னரே மரணம் அடைந்து விட்டதால் சிவகங்கை ஐந்தாவது மன்னராக வெள்ளச்சி  நாச்சியாரின் கணவரும் வேலு நாச்சியாரின் மருமகனுமான வேங்கை பெரிய உடையனத் தேவர் சிவகங்கையின் ஐந்தாவது மன்னரானர். இவர் பெரிய மருதுவின் மகள் மருதாத்தாளை திருமணம் முடித்தார். சிவகங்கை அரசில் முத்து வடுகநாதர் காலத்திலிருந்தே உடன் இருந்தவர்கள் மருது சகோதரர்கள் வீரதீரமிக்கவர்களாகவும் அருஞ்செயல் செய்பவர்களாகவும் இருந்ததால் இவர்கள் பாண்டியர்கள் என்ற சிறப்பு பெயரோடு அழைக்கப்பட்டனர்.




வேட்டையாடுதலில் வல்லவர்களாகவும் வளரி வீசுவதில் வல்லவர்களாகவும் விளங்கினர். வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்டு 1780 முதல் ஆட்சி செய்ய தொடங்கிய பொழுது சிவகங்கையை மீட்க உறுதுணையாக இருந்த பெரிய மருது தளபதியாகவும் சின்ன மருது முதலமைச்சராகவும் (பிரதானி) நியமித்து செயல்படலாயினர். வேங்கை பெரிய உடையனத் தேவருக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தனர். மேலும் அரசின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் பெரிய மருதிடமே இருந்தது. இந்நிலையில் 1799 ஆம் ஆண்டு மைசூர் மன்னர் ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் ஐரோப்பியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதே ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் 1799இல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மன் கப்பம் கட்ட மறுத்ததால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். நவாப் இடமிருந்து வரி வசூல் செய்வதுடன் ஆட்சி அதிகாரங்களும் ஐரோப்பியர்கள் வசமாவதை உணர்ந்து அனைத்து பாளையக் காரர்களும் ஒன்றாக இணைவதை விரும்பினர். 1800 ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் நாள்  விருப்பாச்சியில் கோபால நாயக்கர் தலைமையில் தீபகற்ப கூட்டமைப்பு ஒன்று உருவானது, அதன் பொறுப்பாளராக சின்னமருது தேர்வு செய்யப்பட்டார். இதனால் கோபமடைந்த கர்னல் அக்னியூ சின்ன மருதுவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி  1801 ஜூன் 12 ஆம் நாள் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டார்.



அதற்கு ஒரு மறுப்பினை 1801 ஜூன் 16ம் நாள்  திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் சுவற்றிலும் நவாபின் திருச்சி கோட்டை சுவற்றிலும் அனைவரின் பார்வைப்படும்படி ஒட்டி வைத்தார். இதுவே ஆங்கிலேய அரசுக்கு எதிராக வெளியிடப்பட்ட முதல் ஜம்புத்தீவு பிரடனமாகும். அடுத்தடுத்து கூட்டமைப்பை வலுவிழக்கச் செய்து  இடையே பல சூழ்ச்சிகளுக்குப் பிறகு போராளிகளை உயிருடன் பிடித்து தருபவருக்கு சின்ன மருது பாண்டியருக்கும் பெரிய மருதுபாண்டியருக்கும் தலா 1500 சுருள் சக்கரம், என்றும் வேங்கன் பெரிய உடையன், சிவத்தம்பி, சிவஞானம், துரைச்சாமி, முத்துச்சாமி, கருத்த தம்பி உடையார், முள்ளிக்குட்டி தம்பி போன்றவர்களுக்கு தலா 1000 சுருள் சக்கரமும் பரிசுத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டது. காளையார் கோவில் போரில் தோல்வி அடைந்த பின்னர் சின்ன மருது, காட்டு விலங்கை போல் வேட்டையாடப்பட்டார். கொடூரமான காயங்கள் 
தொடை எலும்பு முறிந்தபடி சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டார். 1801 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் திருப்பத்தூரில் சின்ன மருது, பெரிய மருது, சிவத்தம்பி, அவருடைய மகன் முத்துச்சாமி உள்ளிட்ட 543 நபர்கள் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். தாய் நாடு காக்க தியாகம் பூண்டார்.




சிவகங்கை ஐந்தாவது மன்னரான வேங்கன் பெரிய உடையனத் தேவர் மற்றும்  சின்ன மருதுவின் மகன் முத்து வடுகு என்ற துரைசாமி உள்ளிட்ட 73 பேர் திவாந்திர தண்டனையாக பினாங்கு தீவுக்கு நாடு கடத்தப்பட்டனர். தொடர்ந்து கனன்று கொண்டிருந்த விடுதலைத் தாகம் 1942ஆம் ஆண்டு காந்தி அடிகளுக்கு ஆதரவாக தேவகோட்டையில் நடந்த கிளர்ச்சியில் 162 தியாகிகள் உயிர் நீத்தனர். மேலும் பாகனேரி அருகில் உள்ள பனங்குடி கிராமத்திலும் ஆகஸ்ட் புரட்சியில் 29 ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




முதல் இந்திய சுதந்திரப் போராக 1857 ல் நடைபெற்ற சிப்பாய்க் கழக கிளர்ச்சியை சொல்வதைவிட வெள்ளையர்களை எதிர்த்த முதல் பெண் போராளியாக ஜான்சி ராணியை சொல்வதை விட பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தென்பகுதி விடுதலைப் போரில் ஈடுபட்டு வந்திருக்கிறது. ஜான்சி ராணிக்கு முன்பாக 77 ஆண்டுகளுக்கு முன்னாள் வீரமங்கை வேலுநாச்சியார் வாளேந்தி வெள்ளையரை  எதிர்த்து போராடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1801 ஜூன் 16ஆம் நாள் சின்ன மருது பாண்டியரால் வெளியிடப்பட்ட ஜம்புத்தீவு பிரகடனமே ஆங்கிலேயருக்கு எதிராக வெளியிடப்பட்ட முதல் பிரகடனமாகும். வெள்ளையரை எதிர்த்து முதல் களப்பணியான மன்னரும் சிவகங்கையைச் சேர்ந்த அரசர் முத்து வடுகநாதரே ஆவார் இவ்வாறாக விடுதலைப் போரில் சிவகங்கை ஒரு தனித்த அடையாளத்தை பெறுகிறது” என்றால் அது மிகையல்ல.