தமிழகத்தில் 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
’’தமிழ்நாட்டில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் ரூ.152 கோடியே 20 லட்சம் செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.
அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் கல்லூரிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்களை தோற்றுவித்தும், அதற்கான செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகங்களால் கூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியரல்லா பணியிடங்கள் பல்கலைக்கழகங்களுக்கே திருப்பி அனுப்பப்படும்.
மேலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள் நிதிக்குழு ஒப்புதலின்றி உருவாக்கப்பட்டு இருப்பின், அந்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது’’.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பிற்கு விண்ணப்பம்
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பிற்கு வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
‘’தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் 2022 -23 ம் கல்வியாண்டில் நோய்ப் பரவியல் (எபிடாமாலஜி) துறையின் கீழ் நடத்தப்படும் படிப்புகளுக்கு 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை நோய் பரவியியல் (எம்எஸ்சி எபிடாமாலஜி) படிப்பிற்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகள், முதுநிலை கால்நடை அறிவியல், எம்பிடி, எம்ஒடி, எம்பார்ம், எம்எஸ்சி (லைஃப் சயின்ஸ்) படித்தவர்களும், முதுநிலை அறிவியல் பொது சுகாதாரம் படிப்பிற்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் படிப்புகள், இளநிலை கால்நடை அறிவியல், பிஎஸ்சி நர்சிங், பிபிடி, பிஃபார்ம், பிஎஸ்சி (லைப் சயின்ஸ்), பிஇ சிவில் படித்தவர்களும், முதுநிலை பொது சுகாதார இதழியல் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் கூடிய இதழியல் துறையில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
http://www.tnmgrmu.ac.in அல்லது epid@tnmgrmu.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: 044-22200713 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.’’
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றையும் வாசிக்கலாம்: