கொரோனா தொற்று மற்றும் அதைத் தொடர்ந்த ஊரடங்கால் ஏற்பட்ட கற்றல் இழப்பைத் தமிழ்நாடு, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தால் ஓரளவு மீட்டுள்ளதாக கலிஃபோர்னிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 


வளரும் நாடுகளில் கல்வி முறைகள் எவ்வாறு கற்றல் நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்பது குறித்து கல்வி முறைகளை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி அமைப்பு (RISE) சர்வதேச அளவில் இயங்கி வருகிறது. இந்த RISE அமைப்பு சார்பில், கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தில் இருந்து இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன. ‘கோவிட் 19 கற்றல் இழப்பு மற்றும் மீட்பு: இந்தியாவில் இருந்து தரவு ஆதாரங்களுடன்’ என்ற தலைப்பில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது.


ஆய்வு நடத்தப்பட்ட விதம்


2019-ல் இந்தியாவில் 220 கிராமங்களில் 2 முதல் 7 வயது வரையிலான 19,000 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்குக்குப் பிறகு டிசம்பர் 2021-லும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு 2022 ஏப்ரல் - மே மாதங்களிலும் மீண்டும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 




இந்த ஆய்வு முடிவுகளில், கொரோனா தொற்று மற்றும் அதைத் தொடர்ந்த ஊரடங்கால் ஏற்பட்ட கற்றல் இழப்பை தமிழ்நாடு, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தால் ஓரளவு மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ரைஸ் அமைப்பைச் சேர்ந்த அபிஜீத் சிங், மெளரிசியோ ரோமரோ, கார்த்திக் முரளிதரன் ஆகியோர் இந்த ஆய்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:


’’டிசம்பர் 2021 அறிக்கையின்படி, 18 மாதங்கள் பள்ளிகள் மூடலுக்குப் பிறகு, கற்றல் திறன் வெகுவாகக் குறைந்தது. குறிப்பாக 2 ஆண்டுகள் பள்ளியில் மாணவர்கள் படிக்காத அளவுக்கு மாணவர்கள் மத்தியில் கற்றல் இழப்பு ஏற்பட்டிருந்தது. 9 வயதுக் குழந்தைக்கு 23 மாதங்கள் பின்னோக்கிச் சென்ற அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருந்தது.


5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளுடைய கணிதத் திறனை ஆய்வு செய்ததில், 11 முதல் 15 மாதக் கற்றல் இழப்பு ஏற்பட்டிருந்தது. 9 வயதுக் குழந்தைகளுக்கு 22 மாத கற்றல் வளர்ச்சிக் குறைபாடு ஏற்பட்டிருந்தது. 


மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட பிறகு, மே 2022-ல் மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மூன்றில் இரண்டு பங்கு கற்றல் இழப்பு மீட்கப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் தமிழ் பாடங்களில் மாணவர்களின் மதிப்பெண்கள் மேம்பட்டுள்ளன’’ என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதுதொடர்பாக ரைஸ் அமைப்பின் கார்த்திக் முரளிதரன் கூறும்போது, ’’பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு 50 சதவீத கற்றல் இழப்பு சரிசெய்யப்பட்டுள்ளது. இந்த மீட்பில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் முக்கியப் பங்கு வகித்துள்ளது. 


இல்லம் தேடிக் கல்வித் திட்டம் குறித்து 91.3 சதவீதம் பேர், ’தெரியும்’ என்று தெரிவித்துள்ளனர். 57 சதவீதப் பெற்றோர், தங்களின் குழந்தைகள் இந்தத் திட்டத்தின்கீழ் வகுப்புகளில் கலந்துகொள்வதாகத் தெரிவித்துள்ளனர். வாரத்தில் குறைந்தபட்சம் 4 நாட்களுக்கு 92 சதவீதக் குழந்தைகள், இல்லம் தேடிக் கல்வி மைய வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். 


பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் மூலம் அதிகம் பயன் அடைந்திருக்கின்றனர். கற்றல் இழப்பை அடுத்து ஏற்பட்ட மீட்பில் 24 சதவீத அளவுக்கு இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தால் நிகழ்ந்துள்ளது’’ என்று கார்த்திக் முரளிதரன் தெரிவித்துள்ளார். 


தற்போது மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சுமார் 34 லட்சம் மாணவர்கள் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. 


ஆய்வு விவரங்களை முழுமையாக அறிந்துகொள்ள: https://riseprogramme.org/sites/default/files/2022-09/COVID-19_Learning_Loss_Recovery_Panel_Data_Evidence_India.pdf