அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கலை பண்பாட்டு செயல்பாடுகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
முதன்முறையாக 6 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் வாரத்துக்கு 2 பாடவேளைகளில் இணைக்கப்பட்டுள்ளன.
இசை, நடனம், காட்சிக் கலை, நாடகம், நாட்டுப்புறக் கலை உள்ளிட்ட கலை, பண்பாட்டு செயல்பாடுகள் இதில் அடக்கம். இதில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கலந்துகொள்ள வேண்டும். கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
இந்தத் திட்டத்துக்கு அருகில் உள்ள கலைஞர்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், "மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா நடத்தப்படும்" என்று அறிவித்தார். அதன்படி இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் கலைத் திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்முறைகள்படி ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தின் மூலம் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை அரங்கம் நிகழ்வின் கீழ் கலை சார்ந்த பயிற்சிகளும் மற்றும் 6 முதல் 12 வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகளும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வியில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்
கலைச் செயல்பாடுகள், குழந்தைகளை பிற கற்றல் செயல்முறைகளில் மிகவும் சுறுசுறுப்புடனும் ஆழமாகவும் ஈடுபட உதவுகிறது. இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களைத் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுகிறது, மேலும், அவர்களுக்கு பிடித்த கலையை கற்றுக் கொள்வதால், அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது.
இக்கலை செயல்பாடுகளுக்கென ஒவ்வொரு வாரமும் இரு பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கலை வடிவங்களுக்கான பாடத்திட்டம்
6 முதல் 9 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திற்கு ஏற்றாற்போல் 5 கலை வடிவங்களுக்கு இசை, நடனம், காட்சிக் கலை, நாட்டுப்புற கலை மற்றும் நாடகம் ஆகியவற்றுக்குப் பாடத்திட்டம் தயாரிக்கப்படும். பாடப் பகுதியிலிருந்து கருத்துகள் தெரிவு செய்யப்பட் டு, மாணவர்களின் பங்கேற்பு மற்றும் புரிதலை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கலை வடிவங்களுக்கு ஏற்றவாறு அவை மாற்றி அமைக்கப்படும். இதன் வாயிலாக மாணவர்கள் தெளிவை பெறுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு கலை வடிவங்களின் அம்சங்களையும் கூறுகளையும் கற்றுக் கொள்வார்கள்.
கல்வியில் கலையை ஒருங்கிணைப்பதற்கான அணுகுமுறை
1. பள்ளிச் செயல்பாட்டின் கால அட்டவணையில் கலை மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல்.
2. நாட்டுப்புறக் கலைஞர்கள், பயிற்சியாளர்கள், கலை-நெறியாளர்கள், வல்லுநர்கள், கலைத் தொடர்பான அரசு நிறுவனங்கள் போன்ற வளங்கள், பள்ளி, குறு வளமையம், வட்டாரம் அருகில் இருக்கும் கலைஞர்களை கண்டறிந்து, அந்த கலைஞர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து பயிற்சி அளிக்கும் வகையில் மாநில அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு சார்ந்த பள்ளிகளுடன் ஒருங்கிணைக்கப்படுவர்.
3. ஒவ்வொரு வாரமும் இரண்டு, மூன்று முக்கிய கலை வடிவங்களில், குழந்தைகளை ஈடுபடுத்த வாய்ப்புகள் தர வேண்டும்.
4. வாரத்தில் ஒரு நாள், கடைசி 2 பாடவேளைகள் கலை செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும்.
5. 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு முழுமையாக பங்கேற்க வேண்டும். அதே வேளையில் அந்த வாரத்தில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கும் 2 அல்லது 3 கலை வடிவங்களின்படி குழந்தைகளை குழுக்களாக பிரிக்க வேண்டும். பயிற்சிக்கான ஒட்டுமொத்த ஒருங்கிணைப்புகளை பள்ளியின் பகுதி நேர , முழு நேர கலை ஆசிரியர்கள் செய்ய வேண்டும். அவ்வாறு முழு நேர அல்லது பகுதி நேர கலை ஆசிரியர் இல்லாத பள்ளிகளில், பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து இக்கலை பண்பாட்டு நிகழ்வுகளில் தன்னார்வத்துடன் செயல்பட விரும்பும் ஒரு ஆசிரியரை பொறுப்பு ஆசிரியராக, தலைமை ஆசிரியர் தெரிவு செய்ய வேண்டும்.
6. இவ்வாறு அடையாளம் காணப்பட்ட ஆசிரியர்கள், வெவ்வேறு அமர்வுகளை, செயல்பாட்டு நடைமுறைகள் மூலம் எவ்வாறு ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
7. கல்வி செயல்பாடுகளில் கற்றல் கற்பித்தல் பாடவேளை அல்லாத மற்ற ஆசிரியர்கள் சிறிய குழுக்களை ஒருங்கிணைக்க துணை ஆசிரியராக செயல்படலாம்