உக்ரைனில் உள்ள மோதலை முடிவுக்கு கொண்டு வந்து பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புவது காலத்தின் தேவை என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளார். மேலும், பகைமை உணர்வை உடனடியாக நிறுத்தி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்திற்கு திரும்ப வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியுள்ளது.






ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரத்தில் 'தண்டனையின்மைக்கு எதிரான போராட்டம்' என்ற தலைப்பில் பேசிய ஜெய்சங்கர், "உக்ரைன் போர் சென்று கொண்டிருக்கும் பாதை முழு சர்வதேச சமூகத்திற்கும் ஆழ்ந்த கவலைக்குரிய விஷயமாகும். மேலும், உணவு, தானியங்கள் மற்றும் உரங்கள் மற்றும் எரிபொருளின் அதிக செலவுகள் மற்றும் பற்றாக்குறையின் அடிப்படையில் அதன் விளைவுகளை உலகம் அனுபவித்துள்ளது.


இந்த கவுன்சில் ராஜதந்திரத்தின் மிகவும் சக்திவாய்ந்த சின்னமாகும். அதன் நோக்கத்திற்கு ஏற்ப அது தொடர்ந்து வாழ வேண்டும்" என்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்ச மாநாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின் போது, ​​இது போருக்கான நேரம் அல்ல என எடுத்துரைத்ததை ஜெய்சங்கர் மேற்கோள் காட்டி பேசினார்.


ஐநா பயங்கரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை சேர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை சீனா தடுத்து நிறுத்தியது குறித்து பேசிய ஜெய்சங்கர், "ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு தடை விதிக்கும் போது, ஒரு சிலருக்கு ​​தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பொறுப்பை தவிர்த்து மறைமுகமாக அரசியல் செய்வது வருந்தத்தக்கது" என்றார்.


"'தண்டனையின்மைக்கு எதிரான போராட்டம்' அமைதி மற்றும் நீதியைப் பாதுகாப்பதற்கான பெரிய முயற்சிக்கு முக்கியமானது. இந்த விவகாரத்தில் பாதுகாப்பு கவுன்சில், தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்" என்றும் ஜெய்சங்கர் கூறினார்.


ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற ஐநா பொதுச் கவுன்சிலின் உயர்மட்ட 77வது அமர்விற்காக உலகத் தலைவர்கள் கூடியிருந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுத்துறைக்கான அமைச்சர் கேத்தரின் கொலோனா தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.


கவுன்சில் மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் இங்கிலாந்தின் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் ஜேம்ஸ் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் உரையாற்றினர். 


தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர், "பட்டப்பகலில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டால், தண்டனையிலிருந்து விடுபடுவதற்கான சமிக்ஞைகளை இந்த கவுன்சில் பிரதிபலிக்க வேண்டும். நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டுமானால், நிலைத்தன்மை இருக்க வேண்டும்" என்றார்.