கடந்த ஒரு வருடம் காலமாக பாலாற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவமழையின் பொழுது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி அளவிற்கு பாலாற்றில் தண்ணீர் சென்றது. தொடர்ந்து அவ்வப்போது பெய்யும் மழை, பிற மாநிலங்களில் பெய்யும் மழை உள்ளிட்ட காரணங்களால் பாலாற்றில் குறைந்த அளவில் ஆன தண்ணீர் ஒரு வருடங்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கிறது.
 
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக ஆந்திர எல்லை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் உள்ள பழைய சீவரம் பாலாற்று தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் செங்கல்பட் மாவட்டம் பாலூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சஞ்சய் (16), சம்பத்குமார் என்பவரின் மகன் சஞ்சய் ( 17) ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல்ல பள்ளியில் படித்து வருகின்றனர். இருவரும் பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், நண்பர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு பாலாற்றில் குளிக்க சென்ற பொழுது மாயமாகியுள்ளனர். நீண்ட நேரமாக குளிக்கச் சென்ற இருவரும் திரும்பி வராத காரணத்தினால், அப்பகுதியைச் சேர்ந்த அவர்களுடைய நண்பர்கள் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.
 
குறிப்பாக பாலாற்றில் குளிக்கச் சென்ற இருவருக்குமே நீச்சல் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் காண மாயமான இருவர் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து காவல்துறை மூலமாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாயமான இருவரை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் காவல் துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர். 
 
இரவு என்பதால் தேடுதல் பணி தொய்வு ஏற்பட்டது. மேலும் இன்று மீண்டும் காலை முதல் தேடுதல் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டாலும் இது குறித்து முறையான எச்சரிக்கை பலகைகள் உள்ளிட்டவை வைக்கவில்லை, இது குறித்து கண்காணிப்பும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது காரணத்தினால் இதுபோன்ற சம்பவம் . நடைபெறுவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.