மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் அதிகரித்து நடைபெற்று வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற மீனா, இந்த குற்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த சக காவலர்களுடன் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளை களைய பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தெரிவித்துள்ளார்.
அவற்றை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாவட்டத்தில் பொது மக்களுக்கு எவ்விதமான பிரச்சனைகளும் அச்சமின்றி பொதுமக்கள் இருக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு குற்ற தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பான சாலை போக்குவரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்டத்தில் உள்ள 14 காவல் நிலைய பகுதிகளில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக பணிக்கு பயணிப்போர் நலனுக்காக கூடுதலாக 17 இருசக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் மூலம் சிறப்பு காவல் ரோந்து அலுவலானது இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோந்து வாகனங்களை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு காவல் ரோந்து மூலம் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றுதல் தொடங்கி, தனியே வசிக்கும் முத்த குடிமக்களின் நலனை பாதுகாத்தல், மற்றும் நெரிசலற்ற சாலை போக்குவரத்தை உறுதி செய்தல் போன்ற பணிகளை இந்த சிறப்பு காவல் ரோந்து காவல் அலுவலர்கள் மேற்கொள்வர் என்றும், சிறப்பு காவல் ரோந்தானது, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்பட்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் 100 எண் அழைப்புகளுக்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைவதன் மூலம் பிரச்சனைகள் உடனடியாக கண்டறியப்பட்டு எளிதில் தீர்வு காணப்படும்.
மேலும், பொதுமக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தங்களின் விபரங்களை அளிப்பதன் மூலம் பூட்டப்பட்ட வீடுகள் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, இரவு நேரங்களில் குற்ற தடுப்பு நடவடிக்கை, அதுமட்டுமின்றி அண்டை மாநிலமான புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தில் இருந்து தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கடத்தி வரப்படும் மதுபானங்களும் இந்த ரோந்து வாகன கண்காணிப்பு பணியில் மூலம் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலும், இந்த சிறப்பு காவல் ரோந்தானது செயல்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தெரிவித்துள்ளார்.