மும்பை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் பின் தொடர்ந்ததால் நடிகை ஸ்ருதிஹாசன் எரிச்சலடையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஸ்ருதிஹாசன்
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகரான கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் குழந்தை நட்சத்திரமாக 2000 ஆம் ஆண்டு வெளியான ஹேராம் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான லக் படத்தின் மூலம் ஹீரோயினாக எண்ட்ரீ கொடுத்தார். நடிப்பு மட்டுமல்லாமல் பாடகி, இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட ஸ்ருதி ஹாசன் தமிழில் முன்னணி நடிகர்களின் படங்களிலும் பாடியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ‘7ஆம் அறிவு’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3, புத்தம் புது காலை, லாபம் ஆகிய சில படங்களில் மட்டுமே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேசயம் தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக வலம் வருகிறார் ஸ்ருதி. நடப்பாண்டு மட்டும் தெலுங்கில் வீர சிம்ஹா ரெட்டி, வால்டர் வீரய்யா ஆகிய இரு படங்கள் வெளியாகி அவரின் கேரியரை மேலும் உயர்த்தியது.
வைரலாகும் வீடியோ
இதனிடையே நடிகை ஸ்ருதி ஹாசனின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவானது மும்பை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் விமான பயணம் மேற்கொண்டு வரும் அவரை பொதுமக்கள், புகைப்பட கலைஞர்கள் போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். அப்போஅவர் விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் தனது காரைத் தேடிக் கொண்டிருக்கிறார். அந்நேரம் கருப்புச் சட்டையும் நீல நிற ஜீன்ஸூம் அணிந்திருந்த ஒரு நபர் தன்னுடன் வரும் குழுவினருடன் இணைந்து வருவதை ஸ்ருதி ஹாசன் கவனித்தார். இந்த சூழ்நிலை அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், அவரது குழுவை சேர்ந்தவர்களிடம் சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி விசாரிக்க தூண்டியது.
ஸ்ருதி ஹாசன் தனது குழுவினரிடம், “அவர் யார்?” என்று கேட்கும் ஆடியோ வீடியோவில் தெளிவாக கேட்கிறது. அந்த நபர் ஸ்ருதியின் காரில் ஏறும் வரை உடன் வந்து அவரிடம் பேச முற்பட்டார். அதற்கு "நீங்கள் யார் என்று எனக்குத் தெரியவில்லை, சார்" என்று ஸ்ருதிஹாசன் கூறினார்.
ஸ்ருதியின் சினிமா கேரியர்
ஸ்ருதிஹாசன் தற்போது பிரசாந்த் நீல் இயக்கிய 'சலார்' திரைப்படத்தில் படத்தில் நடிகர் பிரபாஸூக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் நடிகர் நானியின் 30வது படத்திலும் மற்றும் தி ஐ ஆகிய படங்களிலும் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.