விநாயக சதுர்த்தி என்ற  மங்களகரமான திருவிழா இந்தியாவில் இந்துக்கள் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். விநாயகப் பெருமான் என்பவர், சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் மற்றும் அறிவு, செல்வம் மற்றும் புதிய தொடக்கங்களின் கடவுளாக போற்றப்படுகிறார். நாடு முழுவதும், குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இந்த விழா மிகுந்த உற்சாகத்துடன் 10 நாட்களுக்கு மேல் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில்தான் விநாயகப் பெருமான் பிறந்தார் என்பது ஐதீகம்.


 




மங்களம், ஞானம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கும், விநாயகப் பெருமானை எந்தவொரு பூஜை அல்லது சடங்குக்கும் முன்பாக ஒவ்வொரு வீட்டிலும் வழிபடுகிறார்கள். இந்து புராணங்களின் அடிப்படையில் கணேஷ் கடவுள் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன் என்று நம்பப்படுகிறது. புராணத்தின் படி, சிவபெருமான் கோபமடைந்தபோது, அவர் துக்கமடைந்த பார்வதி தேவியை ஆறுதல்படுத்துவதற்காக கணேஷின் தலையை வெட்டி அதற்கு பதிலாக யானையின் தலையை வைத்தார். எனவே விநாயகப் பெருமான் எப்போதும் யானைத் தலை மற்றும் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கணேஷ், மக்களின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்கும், அவர்களின் பாதையில் இருந்து பேரழிவுகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கும் வழிபடப்படுகிறார். இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோயிலுள்ள முக்குறுணி விநாயகருக்கு 18படி அரிசியில் செய்யப்பட்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.





 

உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தேரசுவரர் திருக்கோவிலில் உள்ள 11 அடி உயரம் கொண்ட முக்குறுணி விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொழுக்கட்டை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவில் முக்குறுணி விநாயகருக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அருகம்புல் மாலை, மலர் மாலைகள் சாற்றப்பட்டு விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து 18 படி பச்சரிசியை மாவில்  வெல்லம், தேங்காய், நெய், முந்திரி, ஜாதிக்காய், கிராம்பு, ஏலக்காய், சர்க்கரை, எள் கலந்து கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டது. இதனை சிவாச்சாரியார்கள் தொட்டிலில் கட்டி மேள, தாளங்கள் முழங்க முக்குறுணி விநாயகருக்கு கொண்டு செல்லப்பட்டு  முக்குறுணி விநாயகர் சன்னதியில் உச்சிக்கால பூஜையின்போது விநாயகருக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து விநாயகருக்கு படைக்கப்பட்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயில் பிரகாரத்தில் உள்ள விபூதி விநாயகரையும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 



 

இதே போன்று மதுரை மாநகரில் பிரசிதி பெற்ற மேலமாசி - வடக்குமாசி வீதி சந்திப்பில் உள்ள அருள்மிகு நேரு ஆலாலய விநாயகர், ரயில்வே காலனி அருள்மிகு சித்தி விநாயகர், காமராஜர் சாலையில் உள்ள அரசமரத்தடி விநாயகர் உள்ளிட்ட அனைத்து விநாயகர் திருக்கோயில்களிலும் விநாயகருக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன