வலுவான எதிர்கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பலவீனப்படுத்த அரசு முயற்சிக்கிறது என நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டியுள்ளார். 


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்


மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய அரசு அறிவித்திருந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று (செப்டம்பர் 18) தொடங்கியது. வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரின் முதல் நாள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 4 நாட்களும் சமீபத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற அவையில் நடைபெற உள்ளது. 


இன்றைய நாளில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது பழைய நாடாளுமன்றம் குறித்து பல நெகிழ்ச்சியான தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும், வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு நாம் விடை கொடுக்க உள்ளோம்.பழைய நாடாளுமன்ற கட்டடம் வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாக திகழ்கிறது என அவர் தெரிவித்தார். 


மல்லிகார்ஜுன கார்கே உரை


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “இந்திய ஜனநாயகத்திற்கு அடிக்கல் நாட்டியவர் நேரு. அஸ்திவாரத்தில் உள்ள கற்கள் யாருக்கும் தெரிவதில்லை. வலுவான எதிர்க்கட்சி இல்லை என்றால் குறைபாடுகள் இருக்கும் என்பதை நேருஜி நம்பினார். வலுவான எதிர்க்கட்சி இல்லை என்றால் அது சரி இல்லை. இப்போது வலுவான எதிர்க்கட்சி இருப்பதால் சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பலவீனப்படுத்த அரசு முயற்சிக்கிறது. இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். பிரதமர் அரிதாகவே நாடாளுமன்றத்திற்கு வருவார். அதை ஒரு நிகழ்வு போல மாற்றிவிட்டு சென்று விடுவார்” எனக்குறிப்பிட்டார்.  


ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உரை


பின்னர் காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “சந்திரயான் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. 1946 இல் ஜவஹர்லால் நேரு தலைமையில் அணு ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டது என்று நான் கூற விரும்புகிறேன். அங்கிருந்து, 1964ல் முன்னேறி இஸ்ரோவை உருவாக்கினோம். ஆனால் இன்று இஸ்ரோ என்று எதை அழைப்போம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இல்லையென்றால் என்ன? இந்த பாரதம், இந்தியா பிரச்சினை எங்கிருந்து எழுப்பப்பட்டது?..." என கேள்வி எழுப்பினார்.


மேலும் “இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து இன்று நாம் அனைவரும் வெளியேறுவது உண்மையிலேயே ஒரு உணர்ச்சிகரமான தருணம். நம்முடைய பழைய கட்டிடத்திற்கு விடைபெற நாம் அனைவரும் இங்கு வந்துள்ளோம். நாடாளுமன்ற ஜனநாயகம் பல நற்பண்புகளைக் எடுத்துக்கூறுகிறது. அதற்குத் திறன், வேலையில் அர்ப்பணிப்பு, சுய ஒழுக்கம் தேவை என்று நேரு கூறியிருந்தார். அவர் நாடாளுமன்றத்தில் பெரும் பெரும்பான்மையை அனுபவித்தாலும், எதிர்க்கட்சிகளின் குரலைக் கேட்பதில் சலிப்பில்லாமல் இருந்தார். கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது கேலியோ, திசைதிருப்பவோ இல்லை. ஜவஹர்லால் நேருவுக்கு அவர் நேரத்தை மீறும் போது சபாநாயகர் மணி கூட ஒலிக்கும். இதுதான் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு நேருவின் பங்களிப்பு” என குறிப்பிட்டார்.