சீர்காழி அருகே குடிபோதையில் ஏற்பட்ட சொத்து தகராறில் மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தத்தங்குடி மேல தெருவைச் சேர்ந்தவர் 50 வயதான பாலு, விவசாயி. இவரது மகள் பவானி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது கணவர் தரங்கம்பாடி தாலுக்கா பாலூர் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான கனகராஜ். கனகராஜ் கடந்த சில ஆண்டுகளாக மனைவி மற்றும் தனது இரு குழந்தைகளுடன் மாமனார் பாலு வீட்டிலேயே தங்கி அங்குள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலைபார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கனகராஜ், மாமனார் பாலுவின் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி கேட்டதால் இருவருக்கும் இடையே சொத்துப் பிரச்சனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கனகராஜ் நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு சென்று பாலுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கனகராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலுவை குத்தியுள்ளார்.
இதில் பலத்த காயம் அடைந்த பாலுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பாலு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சீர்காழி காவல்துறையினர் பாலுவின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
கொலை வழக்கு பதிந்து கனகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சொத்து கேட்டு மாமனாரை மருமகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.