நடிகர் கார்த்தி நடித்து ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இயக்குநர் ராஜூ முருகன், தற்போது ‘ஜப்பான்’ படத்தை எடுத்து முடித்துள்ளர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன், கே.எஸ் ரவிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள ஜப்பான் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் படத்தின் டீசர் வெளியானது. இந்திய அளவில் பிரபலமான திருடனாக விளங்கும் கார்த்தி, தமிழ்நாடு போலீசுக்கு மிகப்பெரிய அளவில் சவால் விடும் வகையில் இருப்பதாக காட்சிகள் இடம் பெற்றிருந்தன. நடிகர் கார்த்தியின் 25 ஆவது படமாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.  எத்தன குண்டு போட்டாலும் இந்த ஜப்பான அழிக்க முடியாதுடா என தன் கேரக்டரை கார்த்தி அறிமுகம் செய்யும் காட்சி ரசிக்க வைத்தது. 






இப்படியான நிலையில் கார்த்தியின் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடக்கிறது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கார்த்தியின் 25 படங்களின் இயக்குநர்களும் கௌரவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் சிறப்பு விருந்தினர்களாக சூர்யா, லோகேஷ் கனகராஜ் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதுமிருந்து கார்த்தி ரசிகர்கள் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். இப்படியான நிலையில் ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி முதல் ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.