மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி என்பவரின் மனைவி 42 வயதான பாத்திமா நாச்சியார். இவர் கடந்த 2011 -ம் ஆண்டு மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, தங்க நகை பாதுகாப்பு நிறுவனம் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். தனது நிறுவனத்தில் ஒரு சவரன் நகைக்கு 1500 தருவதாகவும், 15 நாட்களில் நகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஆசை வார்த்தையை நம்பி சீர்காழி தாலுக்கா புங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீது என்பவரின் மனைவி 45 வயதான மஜிலாபானு என்பவர் தன்னுடைய 502 சவரன் தங்க நகையை பாத்திமா நாச்சியாரிடம் கொடுத்துள்ளார்.
இதனை அறிந்த சிதம்பரம், கொடிப்பள்ளம், புத்தூர், சீர்காழி, கீராநல்லூர், வடகரை, கிளியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களது நகையை பாத்திமா நாச்சியாரிடம் கொடுத்து பணம் பெற்றுள்ளனர். முதல் 3 மாதங்களுக்கு பாத்திமா நாச்சியார் சொன்னபடி நகை கொடுத்தவர்களிடம் 15 நாட்களில் நகைகளை திருப்பி கொடுத்துள்ளார். பின்னர் நகைகளை கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நகை கொடுத்த பெண்கள் தொடர்ந்து தங்களது நகைகளை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியதை அடுத்து, பாத்திமா நாச்சியார் மயிலாடுதுறையில் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு கும்பகோணத்தில் தனது வீட்டிற்கு குடி பெயர்ந்து உள்ளார்.
தொடர்ந்து தனது நகைகளை கேட்டு பலமுறை அலைந்து திரிந்த போதிலும் 12 ஆண்டுகள் கடந்த நிலையில், நகை திரும்ப கிடைக்காததால் மஜிலாபானு கடந்த 24ம் தேதி தனது நகையை மீட்டு தரக்கோரி சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சீர்காழி காவல்துறையினர் சம்மன் அனுப்பி பாத்திமா நாச்சியாரை விசாரணைக்கு அழைத்தனர். இன்று பாத்திமா நாச்சியார் விசாரணைக்காக சீர்காழி காவல்நிலையத்தில் ஆஜரானார். இதனை அறிந்து பாத்திமா நாச்சியாரிடம் நகைகளை கொடுத்து ஏமாற்றம் அடைந்த ஏராளமான இஸ்லாமிய பெண்கள் சீர்காழி காவல்நிலையத்தில் திரண்டனர். அப்போது தங்களது நகைகளையும் மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
PM Modi: தாயாரை பறிகொடுத்த நாளிலும் நாட்டுப்பணி செய்த பிரதமர்: “கர்மயோகி” என பாராட்டிய பாஜகவினர்..!
இதனை அடுத்து காவல்துறையினரின் அறிவுறுத்தலின்படி பாத்திமா நாச்சியார் விடம் இருந்து 3042 சவரன் தங்க நகைகளை மீட்டு தரக்கோரி 15 இஸ்லாமிய பெண்கள் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சீர்காழி காவல்துறையினர் பாத்திமா நாச்சியாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாத்திமா நாச்சியார் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய பெண்களிடம் பல கிலோ தங்க நகைகளை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. சீர்காழியில் கிலோ கணக்கில் தங்க நகைகளை மோசடி செய்ததாக ஏராளமான இஸ்லாமிய பெண்கள் காவல்நிலையத்தில் திரண்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.