Rishabh Pant: விபத்தில் அடிபட்ட ரிஷப் பண்ட்டின் புகைப்படங்களை பகிர்வதை நிறுத்துங்கள், முடிந்தால் அவருக்காக பிராத்தனை செய்யுங்கள் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூட்யூப் சேனலில், சமீபத்தில் நடந்த ஐபிஎல் மினி ஏலம் குறித்த நேரலை விவாதத்தில் கூறியுள்ளார்.
ரிஷப் பண்ட் கார் விபத்து
ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகமதுபூர் ஜாட் அருகே அதிகாலை 5.30 மணியளவில் பேன்ட்டின் கார் விபத்துக்குள்ளானதாக கூறப்பட்டுள்ளது. உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மற்றும் உள்ளூர் போலீசார் ரூர்க்கியில் உள்ள சக்ஷாம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலில் ரூர்க்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பண்ட், பின்னர் டேராடூன் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வலது கணுக்காலில் தசைநார் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவர் பேட்டி
செய்தியாளர்களிடம் பேசிய டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஆஷிஷ் யாக்னிக், முதல் பார்வையில் கிரிக்கெட் வீரருக்கு கடுமையான காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் நிலையாக இருப்பதாகவும் கூறினார்.
"அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. சில சோதனைகளுக்குப் பிறகுதான் மேலும் தகவல்கள் கூற முடியும். இப்போதைக்கு, அவர் நன்றாக இருக்கிறார், கவலைப்பட ஒன்றுமில்லை” என்று யாக்னிக் கூறினார்.
எலும்பியல் - பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள்
"மருத்துவர்கள் குழு அவருடன் பேசுகிறது மற்றும் காயங்கள் பற்றி அவர் எங்களிடம் கூறுவதன் அடிப்படையில், அவர் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறார். எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்று யாக்னிக் மேலும் கூறினார். மருத்துவமனை விரைவில் அப்டேட் புல்லட்டின் வெளியிடும் என்று கூறினார்.
விபத்து எப்படி நடந்தது?
பண்ட் தானே காரை ஓட்டி வந்ததாகவும், அதிகாலை 5.30 மணியளவில் விபத்து நடந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கட்டுப்பாட்டை இழந்த பண்ட் கார் டிவைடரில் மோதியதாகக் கூறப்படுகிறது, அதன் தாக்கம் காரணமாக கண்ணாடியிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டதாக ஆதாரங்கள் தெரிவித்தன. கார் உடனடியாக தீப்பிடித்து சில நிமிடங்களில் எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
மாநில அரசு அறிக்கை
“கார் விபத்தில் காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் குறித்து, அதிகாரிகளிடம் இருந்து விவரங்களை கேட்டுக் கொண்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கிரிக்கெட் வீரருக்கு முறையான சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த முதல்வர், சிகிச்சைக்கான அனைத்து செலவையும் மாநில அரசே ஏற்கும் என்று அறிவித்தார். தேவைப்பட்டால் ஏர் ஆம்புலன்ஸ் வசதியும் வழங்கப்படும்” என்று மாநில அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.