சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் கோரத்தாண்டவம் எடுத்தநிலையில், கான்பூர் ஐஐடி பேராசிரியர் ஒருவர் வைரஸின் நான்காவது அலை இந்தியாவை தாக்குமா இல்லையா என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 


சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் அதிகரித்து வரும் கோவிட்-19 நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு, இந்திய அரசும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.  ஓமிக்ரானின் BF.7 மாறுபாட்டின் காரணமாக நோய்த்தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்திய அரசாங்கம் வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.


ஆனால் தொற்று அதிகரித்து வருவதால் இந்தியாவில் கோவிட் நோயின் நான்காவது அலை இருக்குமா என்பது குறித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி மாதத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் அடுத்து வரும் 40-45 நாட்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் எனறும் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கி உச்சம் பெற்று 40 நாட்களில் இந்தியாவிலும் தொற்று பரவல் கணிசமாக உயரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமாக சீனாவில் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதும் இந்தியாவில் அதன் தொடர்ச்சியாக ஓரிரு வாரத்தில் தொற்று பரவத் தொடங்கும்.


 'ஐஐடி கொரோனா மாடலை' வழங்கிய பேராசிரியர் மனீந்திர அகர்வால், "அடுத்த சில நாட்கள் இந்தியாவிற்கு மிகவும் இக்கட்டான சூழலாக இருக்கும். ஆனால் இதனால் பதட்டமோ/ பீதியோ அடையத் தேவையில்லை" என தனியார் தொலைக்காட்சியில் கூறினார். 'ஐஐடி கோவிட் மாடலை” தயாரித்ததில் பேராசிரியர் அகர்வால் முக்கிய பங்கு வகித்தார். மேலும் அவர் கூறுகையில் இந்தியாவில் 98% மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அச்சப்பட தேவையில்லை என்றார்.  


இந்த வைரஸ் சீனாவில் ஏன் பரவுகிறது என்பதை மனிந்திர அகர்வால் விளக்கினார். அக்டோபர் மாதம் வரை சீனாவின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் கூட நோய் எதிர்ப்பு சக்தியை பெறவில்லை என்று அவர் கூறினார். நவம்பர் இறுதி வரை, இந்த எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது, இதன் காரணமாக கொரோனாவின் இந்த மாறுபாடு சீனாவில் மிக வேகமாக பரவுகிறது. சீனாவில் இன்னும் 60 சதவீத மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெறவில்லை என்று அவர் கூறினார்.   


உலகில் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வகையில் 6 நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசாதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 6 நாடுகளில் இருந்து வருவோருக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.


சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


பல மாதங்களாக சீனாவில் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. இதை தொடர்ந்து, பொருளாதார தாக்கத்தின் காரணமாகவும் மக்கள் போராட்டத்தின் விளைவாகவும் பூஜ்ய கொரோனா கட்டுப்பாடுகள் அங்கு திரும்பபெறப்பட்டது. இதன் காரணமாகதான், அங்கு கொரோனா அதிகரித்ததாக கூறப்படுகிறது.