சீர்காழி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு நாள் தோறும் அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதனால் இளைஞர், முதிர்வர்கள் மற்றும் இன்றி கல்லூரி, பள்ளி மாணவர்கள் கூட அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல் லிப், கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துகளை அதிகளவில் பயன்படுத்துவதாக அண்மையில் செய்திகள் வெளியானது.
இதனை அடுத்து, மயிலாடுதுறை மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து, கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டுள்ளார். அதனை அடுத்து மாவட்டத்திலுள்ள காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா தேடுதல் வேட்டையை போலீசார் தீவிர படுத்தியுள்ளனர்.
இந்த சூழலில் சீர்காழி தென்பாதி உப்பனாற்றங்கரையில் கஞ்சா விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை காவல் ஆய்வாளர் மணிகண்டகணேஷ் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சென்று அங்கு கஞ்சா விற்பனை ஈடுபட்டிருந்த சீர்காழி சேந்தங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த தமிம் என்பவரது மகன் 21 வயதான முகமது பைசல், வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவரது மகன் 22 வயதான கவின் குமார் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுபோல அரசூர் ரவுண்டானா பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த 19 வயதான சஞ்சய் என்பவரை கைது செய்த கொள்ளிடம் காவல்துறையினர் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்துள்ளனர்.
Leo : அமோக ஓப்பனிங்; வசூலை வாரிக்குவித்த முதல் 5 இந்தியப் படங்கள்... எந்த இடத்தைப் பிடித்தது லியோ ?