ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு, 29 மாதங்களுக்கு பிறகு தற்போது ஊரெல்லாம் கையெழுத்து வாங்குவது நாடாளுமன்ற தேர்தல் நாடகம் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார். 


நீட் விலக்கு தொடர்பாக கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ள திமுக அரசின் நிலைப்பாடு குறித்து முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ராயப்பேட்டையில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.மாளிகை அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு, 29 மாதங்களுக்கு பிறகு, தற்போது ஊரெல்லாம் கையெழுத்து வாங்குவது ஏன் என அமைச்சர் உதயநிதியும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும்  விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.  


இது தொடர்பாக பேசிய அவர், 2004 ம் ஆண்டில் திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த போது நீட் தேர்வை அமல்படுத்திய காங்கிரஸ் அரசை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்தாது ஏன் என்று கேள்வி எழுப்பிய சி.விஜயபாஸ்கர், நீட் தேர்வு என்ற விஷய தமிழகத்தில் விதைத்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தான் எனவும் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டினார்.


ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகத்திற்கு துரோகம் செய்ததும் காங்கிரஸ்தான் என்றும், நீட் தேர்வில் தமிழகத்துக்கு துரோகம் இழைத்ததும் காங்கிரஸ்தான் என்று குற்றம் சாட்டிய அவர், தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து செயல்படுவது ஏன் என்றும் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார். 


நீட் தேர்வு ரத்து செய்து குறித்து கையெழுத்து இயக்கம் நடத்துவது ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையா என்பதை திமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற அவர், திமுக அரசு நடத்தும் ஓரவஞ்சனையான, தேர்தல் ஆதாயத்திற்காக நடத்தும் கையெழுத்து இயக்க நாடகத்தில் அதிமுக எப்படி பங்கேற்கும் எனவும் சி.விஜயபாஸ்கர் வினவினார். மத்திய அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து, நாடாளுமன்றத்தை முடக்கி, சட்டப் போராட்டம் நடத்துவதுதான் ஆக்கபூர்வமான நடவடிக்கையாக இருக்குமே தவிர, கையெழுத்து இயக்கம் நடத்துவது ஒரு அரசியல் நாடகம் என்று குற்றம்சாட்டிய சி விஜயபாஸ்கர், நீட் தேர்வுக்கு எதிராக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நீதிமன்றத்திற்கு சென்று ஓராண்டு விளக்கு பெற்ற போது, மத்தியில் ,இருந்த காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் இருந்த திமுகவும் மறுசீராய்வு மனு அளித்து இடையூறு செய்தது யாராலும் மறக்க முடியாது என்றும் சி விஜயபாஸ்கர் கூறினார்.


திமுக அரசு நடத்தும் இந்த கையெழுத்து இயக்கம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நடவடிக்கை எனவும் சி விஜயபாஸ்கர் குற்றச்சாட்டினார். அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு அளித்தது, நீட் தேர்வுக்கு எதிராக நிரந்தர போராட்டம் நடத்தி வருவதற்கு ஒரு இடைக்கால தீர்வாக அனைவராலும் பார்க்கப்பட்டது எனவும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்தார்.


மேலும், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது மிகப்பெரிய சாதனை என்றும் சி விஜயபாஸ்கர் கூறினார். நீட் எதிர்ப்பு கொள்கையில் அதிமுக என்றும் உறுதியாக உள்ளதாக கூறிய சி.விஜயபாஸ்கர், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தால் தான் இன்டியா கூட்டணியில் தொடரவோம் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக இன்டியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியிடமோ, ஆம் ஆத்மி கட்சியிடமோ கையொப்பம் பெற்று ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க திமுகவால் முடியுமா எனவும் சி விஜயபாஸ்கள் கேள்வி எழுப்பினார்.