மயிலாடுதுறை மாவட்டம் நல்லத்துக்குடி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் 24 வயதான குருமூர்த்தி. இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 14 -ஆம் தேதி மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் உள்ள பஜாஜ் இருசக்கர வாகன ஷோரூமில் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் செலுத்தி புதிய பல்சர் இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.
அந்த வாகனத்தில் தினந்தோறும் கும்பகோணத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த சூழலில் புதிதாக வாங்கிய பல்சர் வாகனம் 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் இயங்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அடைப்பு ஏற்பட்டு வாகனம் சாலையில் சென்று கொண்டிருக்கும்போதே திடீரென்று நின்று விபத்தில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருமூர்த்தி இதுகுறித்து தான் பைக் வாங்கிய சீனிவாசபுரம் பஜாஜ் நிறுவனத்திற்கு நேரில் சென்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் முதல் சர்வீஸ் செய்தால் சரியாகும் என்று கூறி அனுப்பி உள்ளனர்.
APJ Abdul Kalam: ’ஏவுகணை நாயகன்’ ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினம் இன்று - சாதனைகளின் ரவுண்டப்
ஆனால், சர்வீஸ் செய்தும் வண்டி வேகம் 40 -க்கு மேல் போகாமல் அந்த பிரச்சினை நீடித்துள்ளது. தொடர்ந்து 510 கிலோமீட்டர் தூரம் வாகனம் இயங்கிய நிலையில், தனது பல்சர் வாகனத்தை பஜாஜ் நிறுவனத்திடம் ஒப்படைத்து சரி செய்து தாருங்கள் இல்லையென்றால் பணத்தை திருப்பித் தாருங்கள் என்று கூறியுள்ளார். மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம் வண்டியை நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். வண்டியை வாங்கி வைத்துக் கொண்ட பஜாஜ் நிறுவனத்தினர் தீர்வு ஏற்படுத்தி தராமல் குருமூர்த்தியை இதுநாள் வரை அலைக்கழித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாததால் குருமூர்த்தி தனது வேலையை இழந்து விட்டதாகவும், புதிய வண்டி என்றபெயரில் தரமற்ற வாகனத்தை தனக்கு வழங்கி மன உளைச்சலுக்கு உள்ளாகியதால் சட்ட உதவி மையம் மூலம் குருமூர்த்தி வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் பஜாஜ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணிலிருந்து தாங்கள் கொடுத்த புகார் தொடர்பாக எந்த விபரமும் இல்லை என்று எஸ்எம்எஸ் வந்துள்ளது. மயிலாடுதுறை பஜாஜ் நிறுவனத்தின் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி ஆத்திரமடைந்த குருமூர்த்தி, தனது ஆதரவாளர்களுடன் பஜாஜ் நிறுவனத்தை முற்றுகையிட்டு நிறுவனத்தின் வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போதும் அங்கு யாரும் அவர்களை கண்டு கொள்ளாமல் மேனேஜரை கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேனேஜர் விடுப்பில் இருந்ததால், திங்கட்கிழமை அன்று கடையை பூட்டுவோம் என்று எச்சரிக்கை விடுத்து அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். வாடிக்கையாளர் புதிதாக வாங்கிய வாகனத்தின் குறைபாடுகளை சரி செய்து தராமல், வாகனத்தை வாங்கி வைத்துக் கொண்டு பொறுப்பேற்க மறுக்கும் நிறுவனத்தின் செயல் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.