Sri lanka Worldcup 2023: கால் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை கேப்டன் தசுன் ஷனகா, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


இலங்கை கேப்டன் விலகல்:


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் உலகக்கோப்பை தொடர், இந்தியாவில் கடந்த 10ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற போட்டியில் இலங்கை அணி தசுன் ஷனாக தலைமையில் களமிறங்கியது. இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது,  ஷனகாவுக்கு வலது தொடை தசையில் காயம் ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஷனக குறைந்தது 3 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதன் காரணமாக உலகக் கோப்பையில் மீதமுள்ள போட்டிகளில் இருந்து தசுன் ஷனகா விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


மாற்று வீரர் சேர்ப்பு:


ஷனகாவிற்கு பதிலாக மாற்று விரராக சமிகா கருணரத்னே இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமும் அங்கீகரித்துள்ளது. ஆல்ரவுண்டரான கருணாரத்னே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் வலது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இலங்கை அணிக்காக இதுவரை 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 27 வயதான அவர் 23 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு அரைசதத்துடன் 443 ரன்கள் எடுத்துள்ளார்.


இதையும் படிங்க: Ind Vs Pak Worldcup: மத அரசியலும், வன்ம வியாபாரமும் கலந்த இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. மைதானத்தில் இது அவசியமா?


புதிய கேப்டன் யார்?


நடப்பு உலகக் கோப்பையில்  தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானிற்கு எதிராக விளையாடிய, முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. காயம் காரணமாக ஹசரங்கா போன்ற நட்சத்திர வீரர்கள் இன்றி இலங்கை அணி திணறி வருகிறது. இந்நிலையில் கேப்டன் ஷனாகா தொடரிலிருந்து விலகியிருப்பது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 32 வயதான ஷனகா, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 429 ரன்களைத் துரத்தியபோது, 62 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து குறிப்பிடத்தக்கது. ஷனகா தொடரிலிருந்து விலகியதை அடுத்து மீதமுள்ள போட்டிகளில் இலங்கை அணியின் கேப்டனாக குசால் மெண்டிஸ் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


எதிர்வரும் போட்டிகள்:


இலங்கை அணி லக்னோவில் நாளை நடைபெறும் தனது அடுத்த லீக் போட்டியில், ஆஸ்திரேலியாவிற்கு எதிராக களமிறங்க உள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக ஆஸ்த்ரேலிய அணியும் முதல் இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால், நாளைய போட்டியின் மூலம் தனது வெற்றிக் கணக்கை தொடங்க தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக, நடப்பு உலகக்கோப்பையில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளில், முதல் இரண்டு புள்ளிகளை பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.