ஏவுகணை நாயகன் என போற்றப்படும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று. இளைஞர்களின் கனவு நாயகனாக விளங்கியவரின் சாதனை பயணம் குறித்து காணலாம்.
கனவு நாயகனின் இளமைப் பருவம்
இராமேஸ்வரத்தில் அக்டோபர்,15,1931 ஆம் ஆண்டு பிறந்த அப்துல் கலாம், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் இருந்து கடின உழைப்பாலும், கல்வியாலும் தன் கனவுகளை நிஜமாக்கியவர். ராமேஸ்வரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தனது தொடக்க கல்வியை தொடங்கியவர் குடும்பத்தின் பொருளாதார சூழல் உணர்ந்து பேப்பர் போடுவது உள்ளிட்ட பல வேலைகள் செய்து பள்ளிப் படிப்பை தொடர்ந்துள்ளார். உயர்க்கல்வி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் இயற்பியல் படிப்பை முடித்தார். சென்னை எம்.ஐ.டி.-யில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அதே துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற பிறகு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்) ஆகியவற்றில் பணியாற்றினார்.
1992-1999 ம் ஆண்டு வரை பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகராக இருந்த காலத்தில் பெக்ரான் அணூகுண்டு சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. இஸ்ரோவில் அவர் பணிபுரிந்த காலகட்டத்தில் பல புதிய விண்வெளி தொழில்நுட்பங்களை ராக்கெட் ஏவுவதில் பயன்படுத்தினார்,. எஸ்.எல்.வி. (Satellite Launch Vehicle ) உருவாக்கியத்தில் இவருக்கு முக்கிய பங்குண்டு. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவில் பணியாற்றினார். அக்னி, பிரித்வி ஆகிய ஏவுகணைகள் கலாமின் தலைமையில் உருவாக்கப்பட்டதே. இதனை பாராட்டும் விதமாகவே அவருக்கு ‘ இந்தியாவின் ஏவுகணை நாயகன்’ என்றழைக்கப்படுகிறார். இஸ்ரோவில் பணிபுரிந்த காலகட்டத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாவில் பயிற்சி பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.
தென்கோடியில் உள்ள ஒரு ஊரில் பிறந்தவர் வடக்கே புதுடெல்லியில் அதிகாரத்தின் வாசல் வரை கொண்டு சேர்த்தது அவரின் உழைப்பும் முயற்சிகளும்.. இவரது தலைமையில் ரோகிணி ஏவுகணை விண்ணில் செலுவத்தியது மிகப் பெரும் சாதனையாக பாராட்டப்படுகிறது. விண்வெளி துறையில் வலிமை மிகுந்த ஐந்து நாடுகளுடன் இந்தியா ஆறாவது நாடாக சேர்ந்தது அப்போதுதான். அப்துல் கலாம் பல சோதனைகளை சந்தித்து இருந்தாலும் தன் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய விதம் அவரை சாதனை நாயகனாக உயர்த்தியது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், மைசூர் பல்கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 2002 - 2007-ம் ஆண்டுவரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்தார்.
சர்வதேச மாணவர்கள் தினம்
விண்வெளி துறையில் இருந்தபோதும், குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலும் மாணவர்களின் நலனுக்காக சிந்திப்பதையும் அவர்களை ஊக்கப்படுத்துவதையும் வழக்கமாக கோண்டிருந்தவர். 2010-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை கலாமின் பிறந்தநாளை ’உலக மாணவர் தினம்’ கொண்டாடப்படும் என அறிவித்தது.
இளைஞர்களே ... ‘கனவு காணுங்கள்!’
- கனவு காணுங்கள்... கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு.
- நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்..!
- கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள்தான் தோற்கிறார்கள்.
- வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே உருவாக்கிக்கொள்.
2017-ல் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்தார்.