திருநங்கை வேடமிட்டு திருடும் கொள்ளையர்கள் மற்றும் கைரேகை பதிவாகாமல் கொள்ளையடிக்கும் திருடனையும் கைது செய்து, காவல்துறையினர் 143 சவரன் நகையை மீட்டுள்ளனர்.
மதுரை தல்லாகுளம், செல்லூர், டி.வி.எஸ் நகர், விளக்குத்தூண் மற்றும் கூடல்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டப் பகலில் பூட்டியிருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவம், அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டு வந்தது. குறிப்பிட்ட சில முக்கிய கொள்ளை சம்பவங்கள் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மதுரை மாநகர காவல்துறை கமிஷனர் உத்தரவில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்த தனிப்படையினர் விசாரணை நடத்தினர். கார்த்திக் சென்னையிலிருந்து பேருந்தில் மதுரைக்கு வந்து ஏதாவது ஒரு பகுதிக்கு பகலில் நடந்துசென்று பூட்டியிருக்கும் வீடுகளில் தனது கால்களை மட்டுமே பயன்படுத்தி பூட்டை உடைத்து வீடுகளில் உள்ள பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளார். கைரேகை பதிவாகிவிடக் கூடாது என்று திருடன் மெனக்கிட்டது தெரியவந்துள்ளது. இது போன்று கார்த்திக் மதுரைக்கு 15 முறைக்கு மேல் வந்து 15 வீடுகளில் கொள்ளையடித்து சென்னைக்கு சென்று கார் இரு சக்கர வாகனம் என வாங்கி ஆடம்பரமாக வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்...,”வறண்ட வைகையில் நீரோடும்.. முல்லை பெரியாறு தண்ணீர் பிரச்னையை கையில் எடுக்கும் நிதி அமைச்சர் !
இதே போல் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த ராஜேஸ் மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த அருண் ஆகிய இருவரும் சேர்ந்து இரவு நேரங்களில் திருநங்கைகள் போல நடித்து குடியிருப்பு பகுதிகளில் உள்ள ஆள் நடமாட்டத்தை கண்காணித்துவிட்டு பகல் நேரங்களில் ஆளில்லாத வீடுகளுக்கு சென்று நகை பணத்தினை கொள்ளை அடித்துள்ளனர். இப்படி ஏழு வீடுகளில் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்ததையடுத்து இருவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை மாநகரில் நடைபெற்ற 22 திருட்டு வழக்குகளில் தொடர்புடைய மூவரிடமும் இருந்து சுமார் 53 லட்சம் மதிப்புள்ள 143 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிபொருட்கள் மீட்கப்பட்டு குற்றவாளிகள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய சிக்கலான திருட்டு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து நகைகளை மீட்ட தனிப்படை காவல்துறையினருக்கு மாநகர காவல்துறை கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -MS Dhoni Birthday: மதுரை சச்சினுக்கு தோனி தான் பிடிக்குமாம்... நெகிழ்ச்சியான பேட்டி!