பழங்கள் , காய்கள், கீரைகளை குழந்தைகளுக்கு பழக்குவது, பெற்றோர்களுக்கு மிகப்பெரிய  சவாலான காரியமாக இருக்கும். என்ன  செய்தாலும் சில குழந்தைகள் உணவை  எடுத்து கொள்ள அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு வண்ணமயமாகவும், பிடித்த வடிவத்திலும், பிடித்த கார்ட்டூன் வடிவத்திலும் செய்து தருவது, அவர்களை இந்த உணவை எடுத்துக்கொள்ள ஒரு ஆர்வத்தை  ஊட்டும். அதாவது ஆரோக்கியமான உணவுகளை அவர்களுக்கு  பிடித்தார்போல் செய்துதருவது, மிகவும் சவாலான காரியமாகவும், கலைநயம் மிக்கதாகவும் இருக்கும்.


இந்த வரிசையின் மாம்பழ சீசனில் அவர்களுக்கு பிடித்த ஜெல்லி மாதிரி மாம்பழத்தை  புது வகையாக அவர்களுக்கு கொடுக்கலாம். சில குழந்தைகள் மாம்பழ நிறத்திற்காகவே அதை சாப்பிடுவார்கள். சில குழந்தைகளுக்கு அதன் மணம் பிடிக்காமல், மாம்பழம் பக்கமே போகாமல் இருப்பார்கள். சிலருக்கு அந்த மஞ்சள் நிறம் பிடிக்காமல் சாப்பிடாமல் கூட இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு  குழந்தைகளும் ஒவ்வொரு காரணத்திற்காக சாப்பிட மாட்டார்கள். ஆனால் அனைத்து குழந்தைகளுக்கு ஜெல்லி பிடிக்கும். சுவையும், வடிவமும் கூடுதலான மகிழ்ச்சியையும் கொடுப்பதால் அவர்களுக்கு அது ஒரு வேடிக்கையான விஷயமாகவும் மாறிவிடும். அதனால் மாம்பழத்தை ஜெல்லியாக செய்து கொடுக்கலாம். 


தேவையான பொருள்கள்


தண்ணீர் - 3/4 கப்


மாம்பழம் - 1/2 அரைத்தது


அகர் அகர் - 3 கிராம்


சர்க்கரை - டேபிள் ஸ்பூன்


செய்முறை



  • ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி  அதில் அகர் அகர் சேர்த்து, நன்றாக கலந்து கொண்டு  இருக்கவும்.  அதாவது, குறைந்த வெப்ப நிலையில், அகர் அகர் முழுவதுமாக தண்ணீரில் கரையும் வரை  கிளறவும்.

  • மாம்பழத்தை சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.மாம்பழத்தை  அரைக்கும் போது அதில் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

  • அகர் அகர் முழுவதுமாக கரைந்த பிறகு, அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவைக்கவும். பின் அதில் இந்த அரைத்த மாம்பழத்தை சேர்க்கவும்.

  • இரண்டையும், நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் அதை கேக் தயாரிக்கும் டின், அல்லது சாக்லேட் மோல்டில் ஊற்றி 15 நிமிடங்கள் பிரிட்ஜ்ல் வைக்கவும்.

  • பின்னர் எடுத்து பிடித்த வடிவங்களில் வெட்டி பரிமாறலாம்.


பின் குறிப்பு - 


அகர் அகர் குறைவதற்கு நேரம் எடுத்து கொண்டால், முன்னதாக 10நிமிடங்கள் நீரில் ஊறவைத்து பிறகு  வேகவைக்கலாம்.


அகர் அகர் முழுவதுமாக கரைய வேண்டும் . இதற்கு 5-7 நிமிடங்கள் தேவைப்படும்


3-4 நாட்கள் வரை ப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம்.


அல்போன்சா மாம்பழங்கள்  ஜெல்லிக்கு தனி சுவையை தருகிறது.


ஐஸ்கிரீம் உடன் சேர்த்து சாப்பிடுவது, ருசியை இரட்டிப்பாக்கித் தரும்.


குழந்தைகளுக்கு இது போன்று ஒவ்வொரு பழங்களையும்  அறிமுகப்படுத்தலாம். இதில் மாம்பழங்களுக்கு பதில் ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி என எந்த பழங்களை வேண்டுமானாலும் சேர்த்து ஜெல்லி செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.