முல்லைபெரியாறு  ஆயக்கட்டு பகுதியின் தண்ணீர் திருட்டு பிரச்னை மற்றும் அம்ரூத் திட்டத்தின் கீழ் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து நேரடியாக குழாய் வழியாக  மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பாகவும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேனி, மதுரை மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

 



 

கூட்டத்தில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றபின் செய்தியாளர் சந்திப்பில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரக்கூடிய நீர் சுமார் 2.லட்சத்து 19ஆயிரம் ஏக்கர் ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் வழங்க வேண்டும். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஆயக்கட்டு விவசாயிகளுக்கு உரிமை உண்டு. அதில் குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு, மதுரை மாவட்டத்தின் சில இடங்களில் இரு போகத்திற்கு உரிமை உண்டு. இன்றைய சூழ்நிலையில் கடந்த  15 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சரியான நேரத்தில்  வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

 

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே முல்லைப்பெரியாறு அணையில் இருந்து, வைகை அணைக்கு வரும் நீர் திருடப்படுவது குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு கடிதம் எழுதினேன் அதில்..,” சிறு, குறு விவசாயிகள் அல்லாதவர்கள்  தண்ணீர் திருட்டை தொழிலாக கொண்டவர்கள்  கனரக மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் முறைகேடாக எடுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஆயக்கட்டிற்கு தண்ணீரை பெற முடியாமல் விவசாய தொழிலையே கைவிடக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்படுகிறது. ஊரக நகரம் பேரூராட்சி பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது”.

 



என்பதை அந்த கடிதத்தில் குறிப்பிட்டேன். அதன் விளைவாக ஆற்றின் இரு புறங்களிலும் முதல் முயற்சியாக மின் இணைப்பை துண்டித்தார்கள். ஒரே நாளில் வைகை அணைக்கு வந்து சேரும் நீர் 160 கன அடி நீர் அதிகரித்தது. அதன் பின்னர் முன்னாள் முதல்வர் மறைவிற்கு பிறகு தண்ணீர் திருட்டு தொடர ஆரம்பித்தது.  தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த முறைகேட்டை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளதால், இத்தனை நாள் நடைபெற்று கொண்டிருந்த தவறை பொதுப்பணித்துறையினர், மின்சார துறையினர் இணைந்து யார் யார் இந்த தவறில் ஈடுபட்டுள்ளார்கள், எந்த அளவிற்கு தண்ணீர் திருடப்பட்டுள்ளது என ஆராய்ந்து உள்ளார்கள் .இந்த ஆய்வின் படி தற்போதுள்ள தகவலின் படி 527  இடங்களில் ஆயக்கட்டு அமைப்பிற்கு விரோதமாக தண்ணீர் திருடப்படுகிறது. சிறு விவசாயிகள் பயன்படுத்திடாத 15 குதிரைத்திறன் அளவு கொண்ட மோட்டார்கள் பயன்படுத்தி மின் சாரத்துறைக்கு ஒரு நாளைக்கு முப்பது லட்சம் ரூபாய் வரையில் இழப்பை ஏற்படுத்தி உள்ளனர் .

 

இது போன்ற சமுதாய துரோகத்தை நினைத்து கூட பார்த்தது இல்லை. அப்போது யார் ஆட்சி நடந்தது. யார் பொறுப்பில் அந்த மாவட்டம் இருந்தது. ஆனால் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தெரிகிறது. இதற்கு தனி நபர் காரணமாக இருக்க முடியாது. இதனை முதலமைச்சரின் கட்டளைப்படி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்காக வெளிப்படைத் தன்மையுடன் கூடிய அரசை நடத்திட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகின்ற வகையில்  முயற்சி இருக்கும் என்றார்.

 



 

இந்த பிரச்னை குறித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நீர் பாசன துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த தவறை திருத்தியே ஆக வேண்டும். விவசாயிகள் முழு பயனடையும் வகையில் இதனை செய்து முடிப்பது கடமையாகும். முதலமைச்சர் வழிகாட்டுதல் படி அமைச்சர்கள் ஒருங்கிணைத்து நடவடிக்கையில் ஈடுபடுவோம். அம்ரூத் திட்டத்தில் கீழ் முல்லைப்பெரியாறு லோயர்  கேம்ப் 125.,எம்.எல்.டி. தண்ணீர் பெரும் திட்டத்தின் நிலை குறித்து ஆலோசித்து உள்ளோம் .இதன் நடைமுறை திட்டப்பணிகள் குறித்து ஆலோசித்து உள்ளதோடு, 2023 மே மாதத்திற்குள் இந்த பணிகளை முடித்து  தேர்தலில் அளித்த வாக்குறுதியின் படி குடிநீர் மதுரை மாவட்ட நகர்ப்புற பகுதிகளுக்கு தன்னிறைவு பெரும் வகையில், குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். கடந்த 10.ஆண்டுகளாக வறண்டு போன வைகை நதி முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சியில் மீண்டும் நீரோடும் நதியாக மாறும்  என நம்பிக்கை தெரிவித்தார் .