இந்திய சினிமாக்களில் பலமிகுந்த அரசியல்வாதிகள் தங்களது அடியாட்கள் மூலமாக தொழிலதிபர்களை கடத்திச்சென்று துப்பாக்கி முனையில் அவர்களது சொத்துக்களை மிரட்டி பறிப்பதை நாம் பார்த்திருப்போம். தற்போது அதேபோல ஒரு சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.


அலுவலகத்தின் உள்ளே புகுந்து கடத்தல்:


மும்பையில் உள்ள கோரிகாவ்ன் நகரில் உள்ளது சிந்தாமணி காம்ப்ளெக்ஸ். இங்கு தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. யூ டியூப் மற்றும் சினிமா இசை தொடர்பான பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக ராஜ்குமார் சிங் உள்ளார்.  


இந்த நிலையில், இந்த நிறுவனத்திற்குள் திடீரென 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் உள்ளே சென்றது. இந்த கும்பல் அங்கே வேலை செய்தவர்களை தாக்கிவிட்டு, 36 வயதான அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வான ராஜ்குமார் சிங்கை இழுத்துச் சென்றது. ராஜ்குமாரை கீழே இழுத்துச் சென்ற அந்த கும்பல் அவரை காரில் கடத்தி தப்பிச்சென்றது. இதையடுத்து, அந்த நிறுவன பணியாளர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.


துரத்திச் சென்ற போலீஸ்:


இதையடுத்து, போலீசார் கடத்திச் சென்ற காரின் அடையாளத்தை வைத்து அந்த காரை அடையாளம் கண்டனர். பின்னர், அந்த காரை துரத்திச் சென்றனர். அந்த கார் மும்பையில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு சென்றிருப்பதை கண்டுபிடித்தனர்.


சிவசேனா கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் சுர்வே அலுவலகத்தில் கடத்தல்காரர்களின் கார் இருப்பதையடுத்து, போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். பின்னர், அந்த கும்பலிடம் இருந்து போலீசார் ராஜ்குமார் சிங்கை மீட்டனர்.


ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மகன்:


இந்த சம்பவம் தொடர்பாக ராஜ்குமார் சிங் அளித்த புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ. பிரகாஷ் சுர்வே மகன் ராஜ் சுர்வே உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த கும்பல் அவரை துப்பாக்கியை காட்டி மிரட்டி சில ஆவணங்களில் கையெழுத்திட ராஜ்குமார் சிங்கை வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.


8 கோடி கடன் தொடர்பாக இந்த கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் பரபரப்பான நகரமான மும்பையில் பட்டப்பகலில் ஒரு நிறுவனத்தின் உள்ளே நுழைந்த கும்பல் அந்த நிறுவனத்தின் சி.இ.ஓவை கடத்திச்சென்று துப்பாக்கி முனையில் மிரட்டியதும். இந்த சம்பவம் ஒரு எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடைபெற்றதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எம்.எல்.ஏ. பிரகாஷ் சுர்வே முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ. மகன் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட சம்பவம் சிவசேனாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் எம்.எல்.ஏ. பிரகாஷ் சுர்வேவிற்கு தொடர்பு உள்ளதா? இல்லையா? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த கடத்தல் சம்பவம் மும்பையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க:Crime: ஆவின் பால் பூத் வைப்பதில் தகராறு; விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற தி.மு.க. நிர்வாகி - பெரும் அதிர்ச்சி..!


மேலும் படிக்க: Crime: ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தூக்கி வீசப்பட்ட கொடூரம்... மும்பையில் ஷாக்!