சிம்மத்திற்கு இணையான மாதமும் இல்லை.. ஈசனுக்கு இணையான இறைவனும் இல்லை என்று அகத்திய மகாமுனிவர் கூறியுள்ளார். அகத்தியர் கூறியுள்ள சிம்ம மாதம் என்பது சூரியன் சிம்ம ராசியில் சஞ்சரிக்கும் ஆவணி மாதமே ஆகும். திருவிழா கோலம் பூண்ட ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் வரும் 18-ந் தேதி பிறக்க உள்ளது.


நன்மை தரும் ஆவணி:


ஆடி மாதத்தில் சுபகாரியங்கள் செய்யாமல் காத்திருந்த அனைவரும் ஆவணியில் தங்களது சுபகாரியங்களை செய்யத் தொடங்குவார்கள். திருமணம், புதுமனை புகுவிழா, புதிய தொழில் என பல சுபகாரியங்களை மக்கள் செய்து மகிழ்வார்கள். அந்தளவு சிறப்பு வாய்ந்த இந்த ஆடி மாதமானது ஈசனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏன் தெரியுமா?




தேவர்கள் ஒருபுறம், அசுரர்கள் ஒருபுறம் என பாற்கடலை கடைந்தனர். அப்போது, பாற்கடலில் இருந்து பல அற்புதங்கள் வெளிவந்தது. பாற்கடலை கடைய தேவர்களும், அசுரர்களும் வாசுகி பாம்பையே கயிறாக பயன்படுத்தினர். வாசுகி பாம்பு அழுத்தம் தாங்காமல் ஆலகாலம் எனும் விஷத்தை கக்கியது.


நீலகண்டன்:


வாசுகி பாம்பு கக்கிய ஆலகால விஷத்தை கண்டு அஞ்சி அசுரர்களும், தேவர்களும் சிதறி ஓடினர். அப்போது, அவர்களை காப்பாற்ற சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை அருந்தினார். ஈசனின் உடலில் விஷம் பரவாமல் இருக்க தொண்டையிலே ஆலகால விஷத்தை தேவி இறுகப்பற்றுகிறார். இதனால், நீலகண்டனாக சிவபெருமான் உருவெடுக்கிறார். சிவபெருமானை குளிர வைக்க அவரது தலையிலே கங்கையை தேவர்கள் வைத்து குளிர வைக்கின்றனர். இந்த நிகழ்வுகள் அரங்கேறியது ஆவணி மாதத்திலே ஆகும்.




இதன் காரணமாகவே ஆவணி மாதத்தில் அனைத்து துன்பங்களும் நீங்கி மக்கள் நல்வாழ்வு பெறுவார்கள் என்பார்கள். ஆவணி மாதத்தில் உங்கள் அருகில் உள்ள சிவபெருமான் கோயிலுக்கு சென்று அவரை வணங்கினால் வாழ்வில் நீங்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.


சிறப்பு வாய்ந்தது:


கேரளாவில் இந்த சிம்ம மாதத்தையே முதல் மாதமாக கொண்டாடுகிறார்கள். ஆவணி மாதத்தில்தான் மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைகளை கொண்டு வந்து ஒப்படைத்ததும், மகாபலி மன்னன் வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் கொடுத்ததும் நடந்ததாக ஆன்மீக வரலாறுகள் சொல்கின்றன. ஆவணி மாதம் வரும் ஒவ்வொரு நாளுமே சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக ஆவணி மாத திருவோண நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.


ஆவணி மாதத்தில் வரும் ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி, வரலட்சுமி விரதம் ஆகியவையும் மிகச்சிறப்பு வாய்ந்த நாட்கள் ஆகும்.  


மேலும் படிக்க: Sumangali Pooja: ஆடி மாதத்தில் அனுசரிக்கப்படும் சுமங்கலி பூஜை... வீட்டில் செய்வது எப்படி?


மேலும் படிக்க: Aadi krithigai 2030: பழனி முருகன் கோயில் கிருத்திகை உற்சவ திருவிழா; அரோகரா கோசங்களுடன் பக்தர்கள் வழிபாடு